
மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் மழை காலக்கூட்டத்தொடர் கடந்த வாரம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தொடரின் போது தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியின் வேளாண்மை துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தார். இதனை சிலர் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை சரத்பவார் கட்சியை சேர்ந்த ரோஹித் பவார் எம்.எல்.ஏ சமூக ஊடகத்தில் பகிர்ந்தார். அதோடு மாநில அரசை பிச்சைக்கார அரசு என்று மாணிக்ராவ் கோக்டே தெரிவித்தார். மேலும் விவசாயிகளை பிச்சைக்காரர்களோடு ஒப்பிட்டு பேசினார். இதனால் மாணிக்ராவ் கோக்டேயை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதோடு அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே மீது முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக பட்னாவிஸ் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். மேலும் இது போன்று மேற்கொண்டு தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று மாணிக்ராவ் கோக்டேயிக்கு முதல்வர் பட்னாவிஸும், துணை முதல்வர் அஜித்பவாரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். மாணிக்ராவின் இலாகாவை பறிக்கவேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்தது. இதையடுத்து அமைச்சர் மாணிக்ராவிடமிருந்து வேளாண்துறையை முதல்வர் பறித்துள்ளார்.
அவருக்கு புதிதாக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாரிடம் கலந்து ஆலோசித்து மாணிக்ராவ் கோகடேயின் இலாகா மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோபத்தில் இருப்பதால் வேளாண்துறை அமைச்சர் தத்தாத்ரேயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த இலாகாவும் மாற்றப்படவில்லை என்றும் முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதே போன்று சிவசேனாவை சேர்ந்த சில அமைச்சர்களின் பதவியும் மாற்றியமைக்கப்பட இருந்தது. ஆனால் அதற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சம்மதிக்கவில்லை. ஏக்நாத் ஷிண்டே அவசரமாக டெல்லி சென்று பா.ஜ.க முக்கிய தலைவர்களை சந்தித்து தனது அமைச்சர்களின் இலாகா பறிப்பை தடுத்து நிறுத்தினார். தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் தனஞ்சே முண்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பால் தனஞ்சே முண்டே மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டது.