
இந்தியாவுக்கு 25 சதவிகித வரிப் போட்டு தள்ளியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு 19 சதவிகித வரியைத் தான் போட்டுள்ளார்.
மேலும், ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நட்பு வலுத்து வருகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் இதோ…
கிரிப்டோவும், ட்ரம்ப் குடும்பமும்!
பாகிஸ்தானின் பொருளாதார நிலை உலகம் அறிந்ததே. அது மிக மிக தள்ளாடி வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் ‘கிரிப்டோ கரன்சி’ தங்களது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றும் என்று நம்புகிறது.
இதற்காக, ‘பாகிஸ்தான் கிரிப்டோ கவுன்சில்’ என்ற ஒன்றையும் தொடங்கி உள்ளது பாகிஸ்தான்.
இந்தக் கவுன்சிலிற்கு முழுக்க முழுக்க உதவுவது ‘வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்சியல்’ அமைப்பு.
‘அதற்கு என்ன?’ என்று நினைக்கிறீர்களா… இந்த அமைப்பின் பின் இருப்பதே ட்ரம்பின் குடும்பம் தான்.
இதன் மூலம் பாகிஸ்தானில் கிரிப்டோக்களை நடைமுறைப்படுத்துவது, சட்டப்பூர்வமாக்கப்படுவது, ட்ரம்ப் டோக்கன்கள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பாகிஸ்தான் மூலம் ஒரு நாடே தங்களது கிரிப்டோக்களை சந்தைப்படுத்த கிடைக்கும்போது, இது ட்ரம்ப் குடும்ப பிசினஸிற்கு மிகப்பெரிய பிளஸாக மாற உள்ளது என்கிறார்கள்.
ஆக, கிரிப்டோ மூலம் ட்ரம்ப் அரசியல் ரீதியாக மட்டுமல்ல, தனது பிசினஸ் மூலமாகவும் பாகிஸ்தானுடன் இணைகிறார்.
அமெரிக்காவும், எண்ணெயும்!
பாகிஸ்தான் தங்களிடம் 8 – 50 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கனிமங்கள் இன்னும் தோண்டப்படாமல் உள்ளதாக கூறியுள்ளது. இந்தக் கனிமங்களில் எண்ணெய், செம்பு, தங்கம், லித்தியம், அரிய கனிமங்கள் அடங்கும்.
இந்தக் கனிமங்கள் தற்போதைய சூழலில், பேட்டரிகள், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று ட்ரம்ப் பாகிஸ்தானில் எண்ணெய் வளங்களை மேம்படுத்த உதவ உள்ளதாக கூறியுள்ளார்.
இத்தோடு நின்றுவிடாமல், ‘இந்தியா ஒரு நாள் பாகிஸ்தானில் இருந்து எண்ணெய் வாங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவும் போது, அமெரிக்கா பாகிஸ்தானில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தும். இந்த வரி விதிப்பு குறைப்பிற்கு இது மிக முக்கிய காரணம்.
அமெரிக்கா கனிமங்கள், மூலப் பொருள்களுக்கு போன்றவற்றிற்கு சீனாவை நம்பி இருக்கிறது.
இதை தவிர்க்கத் தான், பாகிஸ்தானைத் தற்போது ட்ரம்ப் பிடித்துள்ளார்.
ஈராக்…
அமெரிக்கா – ஈராக் உறவு விரிசலடைந்துள்ளது. இதை சரிசெய்ய, அந்த நாட்டை அமெரிக்க சந்தையாக மாற்ற, ட்ரம்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு துருப்பு சீட்டு பாகிஸ்தான்.
காரணம், பாகிஸ்தானுக்கு – ஈராக்கிற்கும் நல்ல நட்பு உண்டு. இதற்காக கூட, ட்ரம்ப் பாகிஸ்தானுடன் நல்ல உறவு ஏற்படுத்த விரும்பலாம் என்று கூறப்படுகிறது.

ட்ரம்பிற்கும், பாகிஸ்தானுக்கும் நெருக்கம் ஏன்?
சமீப கால, ட்ரம்பின் பேச்சுகளில் அவரது நோபல் பரிசு ஆசை வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
இதை முதன்முதலில் உசுப்பேற்றி விட்டதே பாகிஸ்தான் தான்.
அமெரிக்காவிற்கு அலுவல் ரீதியாக பயணம் சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்ததால் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பரிசாக அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் விருந்து கொடுக்கப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்தத் தாக்குதலில் ‘நான் தான்’ மத்தியஸ்தம் செய்தேன் என்று கூறிவரும் ட்ரம்பின் கூற்றுக்கு, இன்று வரை இந்தியா மல்லுக்கு நிற்கிறது.
ஆனால், பாகிஸ்தான் அப்படியே ஒப்புக்கொண்டது.
மேலும், ட்ரம்ப் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் பாகிஸ்தான் செய்கிறதோ… இல்லையோ… ஏற்றுக்கொள்கிறது. அதனால் தான், ட்ரம்பிற்கு பாகிஸ்தான் மீது சாஃப்ட் கார்னர் வந்து, இப்படிப்பட்ட விஷயங்களைத் செய்து வருகிறார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…