
திருநெல்வேலியில் ஜூலை 27-ம் தேதி கவின் என்பவர் சுர்ஜித் என்பவரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இதில், கொலையாளி சுர்ஜித் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் தாய் தந்தையான காவல்துறை அதிகாரிகள் சரவணன், கிருஷ்ணவேணி இருவரையும் கைதுசெய்யவேண்டும் என கவினின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
அதுவரையில், தங்களது மகனின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறிவந்தனர். அதைத்தொடர்ந்து, சுர்ஜித் தந்தை சரவணன் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், கவினின் உடலை அவரின் தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 1) காலையில் பெற்றுக்கொண்டனர்.
நெல்லை அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் அவர்களின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலம் கிராமத்துக்கு கவின் உடல் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சிபிஐ விசாரணையில் எனக்கு உடன்பாடு இல்லை.
என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றால்தான் இதுபோன்ற விசாரணைகள் தேவை. என்ன நடந்திருக்கிறது, எதனால் நடந்திருக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிந்தபிறகு நடவடிக்கைதான் தேவை.
நாம் எல்லோருமே வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டிய செயல்தான் இது. சாதிய உணர்ச்சியைத்தான் கொலைசெய்ய வேண்டும். சாதிக்காக மானுடனைக் கொலைசெய்வது உலகத்தில் எங்கு நடக்கும்?

உலகத்துக்கு அறிவியல், நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுத்த இனத்தில் இந்தத் தலைமுறையில் இவ்வாறு கொடுமை நடப்பதை எப்படி சகித்துக் கொள்வது.
மகனை இழந்த தாயின் கண்ணீருக்கு யாரிடம் பதில் இருக்கிறது?
தொடக்கத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்தபோதே இதற்கு முற்று வைத்திருக்க வேண்டும்.
இளவரசன் திவ்யா, யுவராஜ் எனத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சாதிய ஆணவத்துக்கு கவினின் கொலையே கடைசியாக இருக்க வேண்டும்.
அதற்கு தனிச் சட்டமும், கடும் நடவடிக்கைகளும் வேண்டும். இளம் தலைமுறையினரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சாதி, மதத்துக்குள் பெருமை வைக்கப்படுவதுதான் இங்கு பிரச்னை.
பள்ளி சிறுவனை சாதிய வன்மத்தோடு வெட்டுகிறான் என்றால் அந்த பிஞ்சு நெஞ்சில் சாதி வன்ம நஞ்சு எப்படி வந்தது?
சாதி குளம், கிணறு, சுடுகாடு என அமைப்பே தவறாக இருப்பதுதான் பிரச்னை.

செத்தாலும் தமிழனுக்கு சாதி போகாது என்றால் இந்தச் சமூகத்தை ஒன்றும் செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலியில்தான் இந்த மோதல் அதிகமாக நடக்கிறது.
இங்கு சாதி கொலை செய்தது, திருப்புவனத்தில் சட்டம் கொலைசெய்தது.
இரண்டு சாதி வாக்குகளும் வேண்டும் என்று அரசு துடிக்கிறது. இது நாடா சுடுகாடா என்றே தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு எங்கு இருக்கிறது?
சாதிய ஏற்றத் தாழ்வுகள் அற்ற, தீண்டாமை கொடுமை அற்ற சமதர்ம சமூகம் என்று கூறி தி.மு.க ஆட்சியதிகாரத்துக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னமும் சாதியால் கொலைகள் நடக்கிறது” என்று கூறினார்.