
1991-ல் போலீஸ் கான்ஸ்டபிளான சூரி (விஜய் தேவரகொண்டா),18 வருடங்களுக்கு முன் காணாமல் போன தன் அண்ணனைத் தேடும் பணியில் இருக்கிறார்.
அப்போது, அநியாயத்தைக் கண்டால் பொங்கும் குணம் கொண்ட கோபக்கார சூரி, உயர் அதிகாரியை அடித்துவிடுகிறார்.
அதனால் டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் அவரின் தைரியத்தைப் பார்த்து அவரிடம் ஒரு அண்டர்கவர் ஆப்ரேஷன் கொடுக்கப்படுகிறது.
“அது என்னவென்றால் இலங்கையில் இருக்கும் கடத்தல் மாஃபியாவைப் பிடிப்பதுதான். அவர்கள் இலங்கைக்கு அருகில் இருக்கும் திவி தீவில் உள்ள பழங்குடி மக்களைப் பயன்படுத்தியே கடத்தல் செய்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தின் தலைவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் உன் அண்ணன் சிவா. உனக்கு உன் அண்ணன் வேண்டுமென்றால் இந்த ஆப்ரேஷனை முடி” என்று அந்த அதிகாரி சொல்ல, தன் அண்ணனுக்காக சூரி இந்த அண்டர்கவர் ஆப்ரேஷனில் குதிக்கிறார்.
அதன் பின் நடந்தது என்ன, இவர்கள் இருவருக்குமான அண்ணன் – தம்பி உறவு என்னவானது, கேங்ஸ்டராகவும் ஸ்பையாகவும் இருக்கும் சூரியின் மிஷன் எதை நோக்கி நகர்கிறது, பழங்குடி மக்களுக்கும் இவர்களுக்குமான தொடர்பு என்ன ஆகியவற்றை ஸ்பை ஆக்ஷன் டிராமா ஜானரில் எமோஷன், ஆக்ஷன் கலந்து பிரமாண்டமாய் சொல்ல முயன்றிருக்கிறது ‘கிங்டம்’.
சூரியாக விஜய் தேவரகொண்டா. போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிடங்களே வந்தாலும் தோற்றம், உடல்மொழி என மிடில் கிளாஸ் இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார்.
அதுவே, அண்டர்கவர் ஆப்ரேஷனில் இறங்கிய பிறகு, ‘ஆஹா நம்ம ஏரியா வந்துவிட்டது’ என ஆக்ரோஷம், கோபம், வெறி, சண்டை என இறங்கி சிக்ஸர்களைப் பறக்கவிடுகிறார்.
விஜய் தேவரகொண்டாவின் ஃபிலிமோகிராபியில் இது ஒரு முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும்.
நிறைய இடங்களில் தன் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நிதானமாகக் கையாண்டு பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். சூப்பருகா உந்தண்டி ரவுடி!

அண்ணனாக சத்யதேவ் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். எமோஷன் காட்சிகளிலும் சந்தர்ப்ப சூழல்களை எப்படி எதிர்கொள்வது எனக் குழம்பும் காட்சிகளிலும் நுட்பமான முகபாவனைகளில் கவர்கிறார்.
நாயகி பாக்யஶ்ரீ போர்ஸேவுக்குச் சொல்லும்படி முக்கியத்துவம் இல்லை.
புரோமாஷனாக வந்த ரொமான்ஸ் பாடலையும் படத்தில் காணவில்லை. அம்மாவாக ரோகிணிக்கு ஒரே ஒரு காட்சிதான். மற்றவையெல்லாம் எடிட்டில் போய்விட்டதோ?!
சைக்கோ வில்லன் என்றால் பலர் மிகையான நடிப்பைக் கொடுத்து ஓவர்டோஸ் செய்வார்கள். ஆனால், முருகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் வெங்கிடேஷ், மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்து, தெலுங்கு சினிமாவில் தன் கொடியை நட்டியிருக்கிறார். ஈழத் தமிழும் தெலுங்கும் கலந்து பேசும் முருகன் கதாபாத்திரம், பல படங்களில் நாம் பார்த்து பழகியதுதான். ஆனால், அதைத் தனித்துக் காட்டுவது வெங்கிடேஷின் நடிப்புதான்.
ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் ஆகிய இருவரும் படத்தின் பிரமாண்டத்தைக் காட்ட அசுரத்தனமாக உழைத்திருக்கிறார்கள்.
பீரியட் போர்ஷன், ஜெயிலுக்குள்ளும் படத்தின் க்ளைமாக்ஸிலும் நடக்கும் ஆக்ஷன் சீக்வென்ஸ் ஆகியவற்றில் ஒளிப்பதிவில் விளையாடியிருக்கிறார்கள். அனிருத்தின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
தீம் மியூசிக்கைத் தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்தியிருப்பது அந்த காட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

இரண்டாம் பாதியில் இருக்கும் சொதப்பல்களை தன் இசையால் மறைக்கவும் திரைக்கதையின் தொய்வை மீட்கவும் எவ்வளவோ போராடியிருக்கிறார் அனிருத்.
எடிட்டர் நவீன் நூலியும் ‘கிங்டம்’-இன் கீரிடம் வீழாமல் காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவின் உழைப்பால் பாலத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சி ஒன்று, அட்டகாசமான திரையனுபவமாக மாறியிருக்கிறது.
கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதைப் பிரதானப்படுத்துவது இயக்குநர் கெளதம் தின்னனூரியின் ஸ்டைலும் பலமும். இந்தப் படத்திலும் அது நிகழ்ந்திருக்கிறது.
ஆனால், இடைவேளை வரை மட்டுமே! படம் தொடங்கியதிலிருந்து எல்லா விஷயங்களையும் முன்னரே நமக்குச் சொல்லி, அந்தந்தக் கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியே திரைக்கதை அமைத்துக் கூட்டிச்செல்கிறார்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ் சீனுடன் அனிருத்தின் அசத்தலான பின்னணி இசையும் சேர்ந்து நிறைவடையும் முதல் பாதி ‘அதிரிப்போய்ந்தி ரா’ எனச் சொல்ல வைத்தாலும் இரண்டாம் பாதியில் நம்மைக் குழப்பி கதையோட்டத்துடன் ஒன்றவிடாமல் செய்து ‘செதறிப்போயிந்தி ரா’ என உச் கொட்ட வைக்கிறது.

‘ரெட்ரோ’, ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் சாயல் ஆங்காங்கே தெரிவதும் மைனஸ்! முதல் பாதியின் திரைக்கதையில் எதெல்லாம் சிறப்பாக இருந்ததோ அதெல்லாம் இரண்டாம் பாதியில் இல்லாமல் இருப்பது மற்றுமொரு பெரியதொரு மைனஸ்!
ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் முழுமையாக இல்லை, சில காட்சிகளுக்கான காரணமே இல்லை. படம் போகப்போக ‘ஏதோ சொல்லவர்றாங்க’ என்று தோன்றி, ஒரு கட்டத்தில் ‘என்ன அவ்ளோதானா… ?’என ஏமாற்றுகிறது.
சில வீரர்கள் சதம், அரைசதம் என அடித்தாலும் சில நேரங்களில் அணியால் வெற்றி பெற முடியாமல் போகுமல்லவா… அப்படி இந்தப் படத்தில் பலர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக ‘கிங்டம்’ தனக்கான சாம்ராஜ்ஜியத்தை நிலை நிறுத்தவில்லை என்பதே நிதர்சனமாகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…