
திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் உடலை இன்னும் அவரின் குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளவில்லை. இன்று பெற்றுகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை.
ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம்
கவினின் குடும்பத்துக்காக களத்தில் நிற்கும் அத்தனை அமைப்புகளும், ‘ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டும்’ என உறுதியாக ஒலிக்கின்றனர். கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலினே, ‘ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை. இருக்கிற சட்டங்களை தீவிரமாக செயல்படுத்தினால் போதும்.’ எனப் பேசியிருந்தார். .
கீழ்வேளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ நாகை மாலி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் சொல்லி பேசுகையில்தான் ஸ்டாலின் அவ்வாறு கூறியிருந்தார். ஆணவக்கொலைகள் சார்ந்து முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு எதிரான குரல்கள் வலுத்து வரும் நிலையில் நாகை மாலியை தொடர்புகொண்டு பேசினேன்…
சீரியஸா எடுத்துக்கிறாரா இல்லையா?
அவர் பேசியதாவது, ‘ஆணவக்கொலைகளுக்கு எதிராக நாங்க தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கோம். சட்டமன்றத்துல என்னோட குரல வலுவா சொன்னேன். என்னோட கேள்விக்குதான் முதலமைச்சர் ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை, இருக்கிற சட்டங்களே போதும்னு சொன்னாரு. அவர் என்ன புரிதல்ல அப்படி சொன்னாருன்னே தெரியல. ஆணவக்கொலைகளை அவர் சீரியஸா எடுத்துக்கிறாரா இல்லையா அப்டிங்குற சந்தேகமுமே எழுது.

பெண்கள் பாதுகாப்புக்கு தனிச்சட்டம், SC/ST மக்களை காக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பதைப் போல ஆணவக் கொலைகளுக்கும் தனிச்சட்டம் கொண்டு வந்தால் என்ன? முதல்வர் இனியும் தாமதப்படுத்தினால், அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் எங்களின் குரலை இன்னும் வலுவாக எடுத்து வைப்போம். இதை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம். அரசுக்கு எதிராக போராடுகிற வாய்ப்பை அவர்களே உருவாக்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’ எனக் கூறியவரிடம் மேற்கொண்டு சில கேள்விகளை கேட்டேன்.
“இரண்டு பெரிய கட்சிகளும் ஆணவக்கொலைகளை வேகமாக கடந்துச் செல்லத்தான் நினைக்கிறார்களே தவிர, அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அவர்கள் இந்த மாதிரியான சமூக பிரச்னைகளில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முனைவதில்லையே?”
“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொகுதி தொகுதியாக பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். ஏதேதோ பிரச்னைகளைப் பேசி துள்ளிக் குதிக்கிறார். அவர் ஆணவக்கொலையைப் பற்றி தீவிரமாக என்ன கருத்தைப் பேசியிருக்கிறார்? இதெல்லாம் சமூகத்தில் நடக்கக்கூடியதுதான். அதற்காக போராடுவதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் போலத்தான் கையாள்கிறார். திமுக எதிர்ப்பு மட்டும்தான் அவருடைய ஒரே நோக்கு. அதற்காக எங்கும் யாரோடும் கூட்டணி வைக்கலாம் எனும் நிலைக்கு அவர் வந்துவிட்டார்.
திமுகவிடமிருந்தும் ஆணவக்கொலைகளுக்கு எதிராக வலுவான குரல்கள் எழவில்லை. தோழமைக் கட்சிகளின் கண்டனங்களுக்குப் பிறகு முதல்வர் என்ன பேசப்போகிறார் என்பதை பார்க்க வேண்டும். மதச்சார்பின்மை, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக வலுவாக பேசும் முதல்வர், இதே மாதிரியான சமூகப் பிரச்னைகளில் அமைதி காக்கக் கூடாது. முதல்வருடன் திராவிட இயக்கங்களும் இதில் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இரண்டு கட்சிகளுமே சமூகங்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்து சமூக அநீதிகளின் போது ஒதுங்கி நிற்கக்கூடாது.”
“பெரியாரிய அமைப்புகள், அம்பேத்கரிய அமைப்புகள், உங்களின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை தங்களின் செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றனவா?”
“தீண்டாமை ஒழிப்பு முன்னணியைப் பற்றி சொல்கிறேன். நாங்கள் அந்த நிலையில் இல்லை. கோவில் நுழைவு, ஆணவக்கொலை மற்றும் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணிதான் முன்னெடுக்கிறது. ஆனால், எங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை. தோளோடு தோளாக நின்று ஆதரவளிக்க யாருமில்லை. சாதியில் ஊறிப்போயிருப்பவர்கள் எங்களைத்தான் விரோதியாக பார்க்கிறார்கள்.

நாங்கள்தான் எல்லாவற்றுக்கும் காரணமென எங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். திருநெல்வேலியில் எங்கள் கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தார்களே? அப்போது முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ஆனால், நீண்ட கால அடிப்படையில் சமூகமாக மேம்பட நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றினால் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நீதி கிடைக்கும். இதைப்பற்றி சட்டமன்றத்தில் கட்டாயம் ஓங்கி ஒலிப்பேன். தனிச்சட்டம் கொண்டு வரமாட்டோம் என உறுதியாக இருந்தால் கருத்தியல்ரீதியாக நாங்கள் போராட்டத்தில் இறங்க அவர்களே தள்ளுகிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்றார்.