
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களின் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
தனிச் சட்டம்
இந்த கொலை சம்பவத்திற்குப் பிறகு பல்வேறு தரப்புகளிடமிருந்து வரும் பொதுவான கோரிக்கை, `ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டு வேண்டும்’ என்பதுதான்.
இந்த நிலையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் கெளதம சன்னா அவர்களிடம் பேசினோம்…
தமிழ்நாட்டில்தான் அதிக ஆணவக் கொலைகள்!
“உலகத்திலேயே காதலைக் காரணம் காட்டி ஒரு ஆணையோ, பெண்ணையோ ஆணவக் கொலை செய்யும் இழிவான செயல் வேறு எங்கும் நடப்பதில்லை.
இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் அதிகமாக நடக்கிறது.
தமிழ்நாட்டிற்கு இது மிகப்பெரிய தலைகுனிவு. காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் இயல்பான ஒரு உணர்வு.
காதல் உணர்வுக்கு அரசியல் சாயம் பூசுவதும், அரசாங்கம் அதில் தலையிடுவதும் கூடாது என்பதுதான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நீதி.

ஆனால், தமிழ்நாட்டில் சாதியை ஒரு குறியீடாகக் கொண்டு, இயற்கையான காதல் உணர்வை இயல்பாக உணரக்கூட இந்த சாதிய சமூகம் அனுமதிப்பது இல்லை.
இதனுடைய தொடர்ச்சிதான் ஆணவக் கொலைகள். இது வெறுமனே தலித் மக்களுக்கு மட்டும் எதிராக ஏவப்படும் கொலைகள் அல்ல.
சாதிய மனோபாவம் தலைக்கேறிய எல்லா சாதிகளிலும் ஆணவக் கொலைகள் நடக்கின்றன.
8 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள்!
தமிழ்நாட்டில் ஏற்கெனவே எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு அது ஒரு சிறந்த தீர்வாக அமையவில்லை.
எனவேதான் ஆணவப் படுகொலை தடுப்பு சட்டம் என்று தனிச்சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதை வி.சி.க தலைவர் திருமாவளவன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சட்டமேதை அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கரும், தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாகப் பல்வேறு அமைப்புகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளன. ஆனால், அரசாங்கம் ஏன் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை என்பதுதான் இன்றளவும் கேள்விக்குரியதாக உள்ளது.
இதுதொடர்பாக பல பேட்டிகளும், அறிக்கைகளும் வெளிவந்த பிறகும் கூட இந்த ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறன.
கடந்த எட்டு வருடங்களில் மட்டும் தமிழ்நாட்டில் 60-க்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.
சாதி உணர்வுக்கு தீனி போடும் அரசு… தனிச் சட்டம் வேண்டும்!
ஒரு குற்றம் நடைபெறுவதற்குப் பின்னால், அதில் ஒரு பண்பாட்டுப் பின்னணி, உளவியல் பின்னணி இரண்டும் இருக்கிறது.
இந்த இரண்டையும் வரையறுக்க வேண்டியது சட்டத்தின் கடமை.
இந்தப் பிரச்னையை வரையறுப்பதன் மூலமாக அதனுடைய குற்றத்தின் தன்மையை வரையறுத்து, குற்றத்திற்கான தண்டனையைப் பின்னாளில் உறுதி செய்வார்கள்.
ஆணவப்படுகொலை நடைபெறுவதற்கு மூலகாரணங்களைக் கண்டறிவதற்கு இந்த சட்டம் உதவும்.

சாதிய உணர்வுதான் இந்த கொலைகளுக்கு எல்லாம் காரணம் என்றால், சாதியின் மீதான கடுமையான தாக்குதல்களை இந்த சட்டம் உருவாக்கும்.
ஆனால், சாதிய உணர்விற்குத் தீனி போடும் விதமாக எந்த அரசாங்கமும் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தயக்கம் காட்டுகிறது.
சாதியவாதத்திற்கும், மதவாதத்திற்கும் எதிராக இருக்கின்ற இந்த திராவிட மாடல் அரசு, தீண்டாமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவது போல ஆணவக் கொலைகள் தடுப்பு சட்டத்தையும் உடனடியாக நிறைவேற்ற நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்போதுதான், சாதிவெறி மற்றும் சாதி ஆணவத்தின் மூலமாக நடைபெறுகின்ற கொலைகள், குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு அதைத் தடுக்க முடியும்.
தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
சிறப்பு காவல் நிலையங்கள் வேண்டும்!
தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் சாதிய வன்கொடுமைகளை எல்லாம் விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றங்கள் இருக்கின்றன.
அதேபோல ஆணவக் கொலைகளை ஒழிக்க தனி காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
அதேபோன்று தமிழ்நாட்டிலும் கொண்டு வந்தால், இத்தகைய குற்றங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்க அரசுக்கு வசதியாக இருக்கும்.

பொதுவாக காவல் நிலையங்களில் சுற்று வட்டாரங்களில் வசிக்கும் காவலர்கள்தான் பணியில் இருப்பார்கள்.
அத்தகைய காவலர்கள் சாதிய உணர்வோடு ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார்கள் என்கின்ற குற்றச்சாட்டு வருவதனால்தான் தனி காவல் நிலையங்கள் தேவைப்படுகின்றன.
அதேபோல் சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்திற்கும் சேர்த்தே ஒரு மாவட்டத்திற்கு இரண்டு காவல் நிலையங்கள் வீதம் அமைக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் விசாரிப்பதற்கும், இத்தைகைய குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் உளவுத்துறையில் இதற்கென தனி அமைப்பை உருவாக்க வேண்டும்.
இவற்றைச் செய்தால் தான் இந்த சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த முடியும்.
அரசிடம் பணம் இருக்கிறது மனம் தான் இல்லை” என்று தனது வலியுறுத்தலை, விமர்சனத்தையும் கெளதம சன்னா முன்வைத்தார்.