• August 1, 2025
  • NewsEditor
  • 0

ஒட்டு மொத்த உணர்வினை அடிப்படையாகக் கொண்டு மானுடத்துக்காக இயங்கும் கலைகள் ஒவ்வொன்றும் தன்னளவில் அழகியலை வெளிப்படுத்தினாலும் சமூகத்திற்காகப் படைக்கப்படும் கலை இலக்கியங்கள் அதன் உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.  நாம் அனுபவிக்கும் வாழ்வு சிந்தனைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது, அதன் உணர்வலைகள் வந்து வந்து போகும் கரைக்கு நம்மை இழுத்துச்செல்கின்றன. யார் கண்ணும் படாமல் பாறையிடுக்கில் துள்ளும் மீனாகத் தோன்றுகின்ற உணர்வுகளும் அனுபவங்களும் பொதுப்பண்புகளுடன் இணையும்போது கவிதை ரசனையையும், சிந்தனையையும் கிளர்த்துகின்றன. 

ராபர்ட் ஃப்ராஸ்ட்

அவை கவிதைகளாகக் கூடிக்கலைந்த பின்பும், வீடு போய்ச் சேர்ந்தாலும், உண்டு உறங்கிய பின்பும் தொடர்ந்து கூடவே வந்துகொண்டிருக்கின்றன. எங்காவது ஒருவர் அக்கவிதையைப் பேசிக்கொண்டிருக்க,  பூத்துப் பூத்து, பின் காய்த்துக் கனிகின்றன. அப்படியாக, உலகை நிரப்பி வழிந்து, மரங்களோடு மலர்களாய் மலர்ந்து, பனியோடு அருவியாய் உருகி, மலையிலிருந்து பறந்து செல்லும் பறவையாக, பெருங்கவிஞனாகத் தனது படைப்புகளைக் குளத்தில் மலர்ந்த புதுமலராக, தண்டுக்குள் துடிக்கும் நாதமாகத் தந்தவர் ராபர்ட் ஃபிராஸ்ட்.

 அமெரிக்கக் கவிதை உலகின் பிதாமகனாக, புகழுடைக் கவிஞராக ஒருவரை இந்த உலகமே ஏற்றுக்கொள்வது எப்படிச் சாத்தியமானது என்பதை நினைத்துப் பார்த்தாலே வியக்கவைக்கிறது. ‘Nature’s first green is gold, Nothing gold can stay’ என்ற வரிகளின் ஆழம் மகத்தானது. உண்மைகளை, உணர்வுகளை மிகவும் குறுகிய சொற்களில் சொல்வதில்தான் ஃப்ராஸ்டின் மேதமைத் தன்மை வெளிப்படுகிறது.

அவரது கவிதைகள் பெருந்தன்மையால், கனிவால், அழகியலால் தனக்கான இருப்பை இன்னும் நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்றன. ப்ராஸ்ட் தொடக்கக் காலத்தில் எழுதிய கவிதை  “My Butterfly: An Elegy” (என் பட்டாம்பூச்சி: ஒரு நினைவஞ்சலி). இறந்துபோன பட்டாம்பூச்சிக்காக ஆழந்த வருத்தங்களைச் சொல்லும் வரிகள். வானில் பறந்து விளையாடும் பட்டாம்பூச்சி, காதல் உறவுகளுக்கான மொழியாகக் காலங்காலமாக இருந்துவருகிறது. பட்டாம்பூச்சி, கோடை காலத்தில் மகிழ்ச்சியையும், காதலையும், இனிமையையும் ஏற்படுத்துகிறது.

குளிர்காலத்தில் அதன் மரணம் பிரிவை, இழப்பை, வலியை, தோல்வியை, கனவுகளைப் பிரதிபலிக்கின்றன.  குளிர்காலம் வந்துவிட்டால் பட்டாம்பூச்சிகள் இறந்துப்போகுமென்பதே ஏதோ செய்கிறது.  பட்டாம்பூச்சியின் மரணம், உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தி இழந்தக் காதலுக்கான குறியீடாக வந்து செல்கிறது. இயற்கையே ஓர் உயிரைக் கொல்கிறது. தவித்த காதலும் அதில் தோல்வியுற்றக் கவிஞருமாகத் துயர மனநிலையில் எழுதப்பட்ட கவிதையிது. கவிதை சொல்லி தனது சொந்தக் காதல் விவகாரத்தை இக்கவிதையில் பேசுகிறார், இறுதில் காற்றில் சிக்கிய ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையெனச் சோகமாக முடிக்கிறார், இக்கவிதை தொடக்கத்தில் இன்டிபென்டன்ட் இதழில் வெளியிடப்பட்டபோது அவருக்குப் பதினைந்து வெள்ளி சன்மானமாக வழங்கப்பட்டது.

பெரும்பாலும் சிறுபத்திரிகைகள் ஃபிராஸ்டின் வரிகளை அதிகம் கொண்டாடின. அப்படியாக வெளிவந்த இந்த வரிகளின் மூலமாகத் தான் எனக்கும் தெரிந்தவரானார்.

The woods are lovely, dark and deep,

But I have promises to keep,

And miles to go before I sleep,

And miles to go before I sleep

அழகாகவும், இருட்டாகவும், ஆழ்ந்த காடாகவும் இருக்கிறது, ஆனால் எனக்கெனக் கடமைகள் இருக்கின்றன, நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் உள்ளன, நான் தூங்கச் செல்வதற்கு முன் செல்ல வேண்டிய தூரம் அதிகம், நான் நிரந்தரமாக உறங்குவதற்குள் செய்யவேண்டியவை அதிகமுள்ளன என்ற வைரவரிகளாக ஒரு காலத்தில் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தன.

காடுகளில் ஏற்படும் சோதனைகள், அதன் விளைவாக அமைதியின்மையும், மரணமும் வரக்கூடும். திரும்பிவிடாமல் போகக்கூடும், ஆனால் என்னால் இதற்குள் செல்ல முடியாது. என்னுடைய வாழ்வில் கடமைகளும், அதை அடைவதற்கு நான் இன்னும் தூரம் போகவேண்டும். உறங்கச்செல்லும் முன்பாக ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கின்றன, அடுத்த வரியில் அதையே அழுத்தமாகத் திருப்பிச் சொல்வது நான் நிரந்தரமாக உறங்கச் செல்வதற்கு முன் முடிக்க வேண்டிய காரியங்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன. அவற்றைச் செய்து முடிக்க வேண்டுமென்பது தாரக மந்திரமாக எனது வாழ்வினூடாகவும் வந்துகொண்டிருக்கின்றன. அமைதிக்கும் இயங்குதலுக்கும் ஓய்வுக்கும் பொறுப்பிற்கும் இடையிலான தருணங்கள், ஒவ்வொரு நாள் உறங்குவதற்குமுன்பும் இந்த வரிகள் ஆழ்ந்த தியானத்திற்கு ஆட்படுத்துபவை.

“காட்டில் இரண்டு பாதைகள் பிரிந்தன, நானோ

அதிகம் பயணிக்கப்படாத பாதையைத் தேர்ந்தெடுத்தேன்,

அதுவே என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது.”

ஃப்ராஸ்ட் எழுதியதில் ஆகச் சிறந்த கவிதையான The Road Not Taken, உலகப் புகழ்பெற்ற கவிதையாகக் கொண்டாடப்படுகிறது. எந்தளவுக்குப் புகழ்பெற்றதோ அந்தளவுக்கும் தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டது என்றும் பேசப்பட்டது. தோற்றத்தில் மென்மையாகத் தோன்றினாலும் இதற்குள் மென்மையான பகடியும் இருக்கிறது. நமது வாழ்க்கை எந்தப் பாதையில் திரும்பினாலும் அதில் திருப்பங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. அன்றாடத்தில் எது எளிமையாக, உடனடியாகக் கிடைக்கிறதோ அதையே தேர்ந்தெடுக்கப் பழகியிருக்கிறோம். அப்படித் தேர்ந்தெடுத்துவிட்ட பாதையில் கிடைப்பவை எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. துன்பங்கள் வரும்போது எதை நாம் தவறவிட்டு வந்தோமோ அதன்மீதுதான் மோகம் அதிகமாகும். சலிப்பூட்டும் அனுபவங்களிலிருந்து நான் இப்படியிருந்திருக்கலாம், அப்படியிருந்திருக்கலாம் போன்ற சிந்தனைகள் தவறவிட்டது மகத்தானதைப்போல் தோன்ற வைக்கின்றன. எளிய பாதையை நிராகரித்துவிட்டு எவரும் பயணிக்காத தனித்துவமான சிந்தனையை முன்வைத்து வளர்ந்தவர்கள் வெற்றியை எளிதாக அணுகுகிறார்கள். பாதைகளில் சமரசம் செய்துகொண்ட கவிதை எல்லோருக்கும் பொருந்துவதாலேயே செவ்வியல்தன்மையுடன் இன்றும் நினைக்கப்படுகிறது.

அமெரிக்கக் கவிதை வெளியில் கட்டப்பட்ட கோயிலாகக் கருதப்படும் ஃப்ராஸ்ட், 1874 மார்ச் 26ஆம் நாள் சான்பிரான்சிஸ்கோவில் பிறந்தவர். அமெரிக்கப் படைப்புலகத்தில் தனித்துவம் நிறைந்தவராக, ஆழ்ந்த உளவியலையும் உணர்வுகளையும் மொழியின் வழியாக ஒருங்கிணைத்து இயற்கையோடு ஒன்றிய வாழ்வியலை மையப்படுத்திக் கவிதைகளை எழுதியிருக்கிறார். கிராமப்புற வாழ்வியலைச் சித்தரித்து வரிகளாக்கி வெகுஜனத்திற்குக் கொண்டு சென்றார். அன்றாடச் சூழலைச் சாதாரண மக்களும் ரசிக்கும் வண்ணம் யதார்த்தங்களை எழுத்தில் கொண்டுவந்தார்.

நவீன வாழ்வியலென அடையாளப்படுத்தப்படும் வாக்கியங்கள் அனைத்திலிருந்தும் விலகியிருந்தார். அதனாலேயே அவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை முழுமையாக மறுக்கவில்லை. கடந்தகால வாழ்வியலையும் ஏக்கங்களையும் பிணைந்த கவிதைகளில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார், அமெரிக்கச் சமூகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் குறித்து அவருக்குப் பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை; அக்கறையுமில்லை. தொழில் மயமாக்கலையும்,, நகர மயமாவதையும் செல்வத்தின் பெருக்கத்தையும் முன்னிருத்தும் நவீன யதார்த்தங்களான வானொலி, உயர்ந்து நிற்கும் கட்டடங்கள், வண்டிகள், திரைப்படங்கள், தொழில்கள் என்பதைப் பற்றிய எதுவுமே அவரது கவிதைகளில் இல்லையென நவீன வாழ்வியலைக் கவிதைகளில் கொண்டுவரவில்லை என்று விமர்சித்திருக்கின்றனர்.

இருப்பினும், ஃப்ராஸ்டின் கவிதைகளில் உலகளாவிய தன்மை, அவரது குரலில் உணர்ச்சியும், புத்திசாலித்தனமும் கிராமப்புறப் பின்னனியில் உருவகங்களை, குறியீடுகளை அதன் முக்கியத்துவத்தைச் சொல்கிறார். சிறந்த கவிதைகள் யதார்த்தங்களை மீறிய அவரது பார்வைகள் இயற்கையை வெளிச்சம் போட்டுக் காட்டின. தலைமுறை தலைமுறையாக வாசிக்கத் தகுதியான கவிதைகளைத் தந்த ஒரே கவிஞராக இன்னும் இருந்துவருகிறார். கவிதைக்காக நான்குமுறை புலிட்சர் பரிசை வென்ற ஒரே கவிஞராக அமெரிக்க இலக்கிய வரலாற்றில் அழிக்க முடியாத சக்தியாக விளங்குகிறார் ஃபிராஸ்ட்.

அவரது மெண்டிங் வால் கவிதை,

 மலைக்கு அப்பால் எனது அண்டை வீட்டாரிடம் சொன்னேன்

அன்றொரு நாள் சந்தித்த அதே கோட்டில் நடக்கிறோம்

மீண்டும் நமக்கிடையே சுவரை அமைத்துக்கொள்கிறோம்

நமக்கிடையில் சுவரை வைத்துக்கொண்டே நாம் செல்கிறோம்

 ——

அவன்  தந்தை சொல்வதைக் கேட்டுப் பின்னால் செல்ல மாட்டான்,

அதைப்பற்றி நன்றாக யோசிப்பது அவனுக்குப் பிடிக்கும்

அவன் மீண்டும் சொல்கிறான்,

‘நல்ல வேலிகள் நல்ல அண்டை வீட்டாரை உருவாக்குகின்றன.’

 கற்சுவரை பழுதுபார்த்துக் கொண்டே மரபையும் பாரமாரியத்தையும், எல்லைகளையும் மனிதர்களுக்கிடையேயான கோட்டையும் சொல்லும் அழகிய கவிதையிது. நல்ல வேலிகள் நல்ல அண்டை வீட்டாரை உருவாக்குகின்றன என்பது மந்திரமாக இருந்தாலும் அதற்குள் சவாலும் நகைப்பும் ஒலிக்கிறது. சுவர்கள் இருபகுதியை ஒன்றிணைப்பதா அல்லது இரண்டையும் பிரிப்பதா என்ற கேள்வியும் கூடவே வருகிறது. நகைச்சுவையான உரையாடலில் வேலிக்கிடையில் வைக்கப்பட்ட கற்கள் தகர்ந்துவிடுகின்றன.

ஃப்ராஸ்டின் தந்தை மிகவும் பிரபலமான பத்திரிகையாளர், ஃப்ராஸ்ட் பதினொரு வயது சிறுவனாக இருந்தபோது காச நோயால் மரணமடைந்தார். இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது அம்மா பாட்டி வீட்டிற்குச் சென்றார். அங்கேயே வளர்ந்த ஃப்ராஸ்ட் தாயார் பணியாற்றிய பள்ளியிலேயே படித்தார். வகுப்பில் சிறந்த மாணவராக விளங்கியவர், அதே பள்ளியில் படித்த எலினோர் வைட்டைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். மனைவிக்கும் கவிதைகளின் மீது ஆர்வமிருந்ததால் இருவரும் சேர்ந்தே கவிதைகளை வாசித்தனர். முதன்முதலில் தி இண்டிபெண்டண்ட் என்ற வாராந்திர இலக்கிய இதழில் அவரது “மை பட்டர்ஃபிளை: ஆன் எலிஜி” என்ற கவிதைதான் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தியது. இருவருக்கும் திருமணமாகி, பனிரெண்டு ஆண்டுகளுக்குள் ஆறு குழந்தைகள் பிறந்தன. இரண்டு பேர் மட்டுமே பிழைத்திருந்தனர். மற்றவர்கள் சிறுவயதிலேயே இறந்துபோனார்கள். அவருடைய வருமானம் குடும்பத்தை நிர்வகிக்கப் போதவில்லை. அவரது குடும்பம் நியூ ஹாம்ப்ஷயருக்கு அருகிலுள்ள பண்ணையில் கோழிகளை வளர்த்தது.

40 வயதுவரை ஃப்ராஸ்ட், கவிதை நூல் எதுவும் வெளியிடவில்லை; சில பத்திரிகைகளில் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தார். கவிதை என்பது இளையர்களின் விளையாட்டுத்தனங்களில் ஒன்றாகவே அக்காலத்தில் கருதப்பட்டது. 1911களில் ஃப்ராஸ்ட் கவிதைக்கான ஆதரவின்மைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அவரது பண்ணையின் உரிமை ஃப்ராஸ்டுக்கு வழங்கப்பட்டது. உடனே பண்ணையை விற்று, அதில் கிடைத்த வருமானத்தில் லண்டனுக்குச் சென்று திறமைகளை அங்கீகரிக்கும் வெளியீட்டார்களைச் சந்திப்பதென முடிவு செய்தார். 1912-ல் ஃப்ராஸ்ட் குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றது. அச்சிடப்படாத கவிதைகளை ஒரு கட்டாகக் கட்டி, தன்னுடன் எடுத்துச் சென்றார். லண்டனில் உள்ள வெளியீட்டாளர்கள் புதுமையான படைப்புகளுக்கு ஆதரவு தர,  கவிதைத் தொகுப்புகளை வெளியிட அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஃப்ராஸ்டின் மனைவி எலினோர், 1938-இல் புளோரிடாவிலுள்ள அவர்களது குளிர்கால வீட்டில் இதயச் செயலிழப்புக் காரணமாக இறந்தார். ஃப்ராஸ்ட், ஹார்வர்ட், டார்ட்மவுத், ஆம்ஹெர்ஸ்ட் ஆகிய கல்லூரிகளில் பணியாற்றியபோது கவிதை வகுப்புகளை எடுத்தார். இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அவருக்குக் கௌரவப் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கியிருக்கின்றன்.

தி டெத் ஆஃப் தி ஹயர்டு மேனில் அந்நியப்படுத்தப்பட்ட வாழ்க்கையையும், ‘ஹோம் பரியல் கவிதையில் துக்கத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் கடினமான பாதையில் நடக்க இயலாமையைப் பேசுகிறது. தி ஆன்செட் கவிதையில், குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது, யாராலும் கட்டுப்படுத்த இயலாதபடி ஒரு படையெடுப்பைப் போல் வருகிறது,உலகை மூடியால் கவிழ்த்து வைப்பதைப் போல் அனைவரின் பார்வையையும் மறைக்கிறது. ஆனால் குளிர் எப்போதும் நீடிக்கமுடியாது. வீழ்ச்சிக்குப் பிறகு வாழ்வு வருவதும் இள்மையும் பசுமையும் திரும்பி வருவதையும் தவிர்க்க இயலாது என்பதாக ஃப்ராஸ்டின் கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை அதீதமாகச் செதுக்கியிருக்கின்றன.

ஃப்ராஸ்ட் அடிப்படையில் மகிழ்ச்சியான கவிஞராக அறியப்பட்டாலும், சோகத்தைக் கூறும் கவிதைகளும் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.    முதுமையின் தைரியத்தால் நிரம்பிய இறுதித் தொகுதி ‘இன் தி கிளியரிங்’ -ல் அடர்ந்து வளர்ந்த காட்டில் மிகவும் பாதிக்கப்பட்டதைத் திறப்பாகச் சித்தரிக்கிறார்,  எதிரில்ஆக்கிரமிக்கும் மரங்கள் அவற்றின் உண்மையான இருளின் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகின்றன.

 ‘பனித்துகள்’ என்னும் சிறிய கவிதை சிறு அசைவை உணர்வுப்பூர்வமாக, மனத்தில்மாற்றத்தைத் தருவதாகச் சித்தரிக்கிறது.

ஒரு காகம்

ஹெம்லாக் மரத்திலிருந்து

பனித்துகள்களை

என் மீது குலுக்கியது

என் இதயத்தைத் தந்தது

என் மனநிலையை மாற்றியது

நான் துயருற்றிருந்த நாளொன்றின்

மிச்சமிருந்த நேரத்தைக் காப்பாற்றியது

மனச்சுமை பெருமளவில் உயரும்போது, ஒரு சிறிய பனித்துளி போதும் அதனை எளிதாக உடைத்துவிட, எழுப்பி விட. ஃப்ராஸ்டின் கவிதையில், ஹெம்லாக் மரத்திலிருந்து சாதாரணப் பனித்துகள் தூசியாக ஒரு காகத்தின் அசைவில் சோகமான தருணத்தின்மீது விழுகிறது. துயரமான நேரத்தில் இச்சிறிய நிகழ்வு அவரது மனச்சுமையைக் குறைத்துவிடுகிறது. ஹேம்லாக் மரத்திலிருந்து விழும் பனித்துகள்கள் சாதாரணமானது, ஆனால் தேவையான தருணத்தில் தேடி வருவதுபோல், இந்தக் கவிதையும் காகத்தின் அசைவில் மரத்திலிருந்து பனித்துகள்களாக விழுந்து இதயத்தை மீட்டுக் கொடுக்கிறது. இதன் ஆங்கில வடிவில் மென்மையான இசை நயத்துடன் மனதிற்குள் நெளிவது போல் மொழிகளுக்குள் அடர்த்தியாயிருக்கிறது, குறும்பும் சோகமும் நிறைந்த கவிதை ஆழ் மனத்தில் மாற்றத்தைக் கொடுக்கிறது.

‘பாலைவன இடங்கள்’ தனது சொந்த உள்நோக்கத்தின் உருவப்படங்களாகும்,

பனி விழுகிறது, இரவு வேகமாக வருகிறது, ஓ, வேகமாக

நான் கடந்து சென்ற வயலில்

பனியால் கிட்டத்தட்ட மிருதுவாக மூடப்பட்ட தரை

ஆனால் சில பதர்களும் வைக்கோலும் கடைசியாகத் தெரிந்தன”

சுற்றியுள்ள காடுகள் அவர்களுடையது, அனைத்து விலங்குகளும் அவற்றின் குகைகளில் மூழ்கியுள்ளன. என்னை அறியாமலேயே தனிமை எனக்குள் புதுந்துவிடுகிறது. எவ்வளவு தனிமை இருந்தாலும் இருண்ட பனியின் வெண்மையில் வெளிப்படுத்த எதுவுமேயில்லை. நட்சத்திரங்களுக்கிடையில், எந்த மனிதருமில்லாத நட்சத்திரங்களில் அமர்ந்து எனது வீட்டிற்கு அருகில் உள்ளது. பாலைவனமாகியிருக்கும் மனம் என்னைப் பயமுறுத்துகிறது என்கிறார். 

ஃப்ராஸ்ட் ஒருபோதும் வசனக்கவிதைகளில் ஆர்வம் காட்டியதில்லை. அதனுடைய தளர்வான நடை அலுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவிதைக்குள் நடமாடும் மெல்லிய இசைத்தன்மை அவருக்கு நெருக்கமாகயிருந்திருக்கிறது. பழைய நடையைத் தெரிந்துகொண்டு புதிய நடையைப் பயன்படுத்த தெரியவேண்டுமென்று சொல்கிறார். ஆனாலும் சில சமயங்களில், ஃப்ராஸ்ட் வசனக் கவிதைகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கிறார். ஆப்பிள்-பிக்கிங், அதன் நீண்ட வரிகள் சந்த நயத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. கவிதையில் பழைமைக்கும், புதிய நடைக்கும் இடையில் நிற்பவராகத் தனது சக்தியை வெளிப்படுத்துகிறார்.

எனக்கு அளவுக்கதிகமாகவே கிடைத்துவிட்டது

ஆப்பிள் பறிப்பதில் அதிக ஆர்வமிருந்தது

ஆனால் நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்

ஏணியை எடுத்து வைத்து அதம் மேலேறி சொர்க்கத்திற்குச் செல்கிறார். அருகில் ஆப்பிள்கள் சிதறியிருக்கின்றன, மரத்தில் பறிக்காத ஆப்பிள்கள் கிளைகளில் தொங்குகின்றன. ஆனால் ஆப்பிள்கள் பறிப்பதை நான் நிறுத்திவிடுகிறேன், எனக்குச் சோர்வாகயிருக்கிறது என்கிறார். ஆனால் ஆப்பிளின் வாசனை தூக்கத்தைக் கலைக்கிறது. ஃப்ராஸ்டின் கனவில் ஆப்பிள்கள் தோன்றி மறைகின்றன. அதன் வளைந்த முனைகளும், ஆப்பிள் பூவின் வடிவங்களும் காட்சி படிமமாகக் கவிதையில் வருகிறது. ஆப்பிளைக் கவிதையோடு ஒப்பிட்டு நோக்கினால் கவிதைவெளியில் ஆப்பிளாகத் தெரியும் கவிதைகளை எழுதியெழுதி ஒருகட்டத்தில் அயர்ந்து போகிறார். ஆனால் விடாமல் கவிதை வாசனை அவரது தூக்கத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

ஃப்ராஸ்டின் புகழ்பெற்ற இரட்டை வரிகள் உலகப்புகழ் பெற்றன. நேரு தனது மேசையில் எப்போதும் அதனை வைத்திருக்கிறார். இவ்வரிகளைப் பல சமயங்களில் மேற்கோளாகவும் பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக, தனது கடைசி நாட்களில், அவர் எழுதிய கடிதங்களிலும் அவை இடம்பெற்றுள்ளன. பல்வேறு கவிஞர்களுக்குப் ஃப்ராஸ்ட் முன் மாதிரியாக விளங்கியிருக்கிறார். வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்த முதல் கவிஞர். தனது 86 வயதில் ஜான் கென்னடியின் முன் கவிதை வாசித்தது பெருமைப்படும் தருணமாக இருக்கிறது. ‘இன்றைய பாடம்’ என்ற கவிதையிலிருந்து, ‘இந்த உலகத்தோடு காதலர்களைப் போல் சண்டையிட்டேன்’  என்ற வரி அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.  ஃப்ராஸ்டின் கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை, சில நேரங்களில் வார்த்தைகளாக்க முடிவதில்லை.

 – சொற்கள் நிறைந்தன

மேகங்களின் நிழலான வெளிச்சத்தில்

காற்றில் அலைந்து திரிந்து

கடல் தாண்டி வந்த சொற்கள்

சிற்றோடை நீரில்

கால் குளிர நின்று கொண்டிருக்கின்றன

மிதந்து வந்த சொற்கள்

கரையை அடைந்து விட்டன.

அவற்றின் அணைப்பில்

மலைகளும் மரங்களுமாய்

பெருமிதம் கொள்கிறேன்

சிறிய விதையாகத் தொடங்கி

பெரிய மரமாக விளைந்தது கண்டு மகிழ்கிறேன்

இனி புதிய சொற்கள்

ஆங்காங்கே

மெல்லத் தலை நீட்டும்.

இடையில் மலர்ந்த மலர்களில்

நறுமணமாய் விரிந்து

அன்பும் ஆதரவும்

பொழிந்த சொற்களில்

நெஞ்சம் குளிர்கிறது

விரல்களை மேலும் கீழுமாய்த் தள்ளிவிட்டு

சொற்களோடு பேசிய ரகசியத்தை

என்னிடமும் சொல்லுங்கள்

அன்புடன்

இன்பா

தொடர்புக்கு: a.inbha@gmail.com

https://www.instagram.com/inbha.in?igsh=cXlzZ3huZnJzd2do

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *