• August 1, 2025
  • NewsEditor
  • 0

‘டி.சி.எஸ் 12,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது’ என்று தற்போது சுழன்றுகொண்டிருக்கும் செய்தி, இந்திய ஐ.டி துறையிலும், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் மத்தியிலும் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது. ‘இது வெறும் ஆரம்பம்தான், டி.சி.எஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி ஐ.டி நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கலாம்’ என்று, கூடவே சுழல ஆரம்பித்துள்ள செய்திகள், பீதியை மேலும் கூட்டுகின்றன.

ஐ.டி துறையில் காணப்படும் மந்தநிலை, ஏ.ஐ என்ற செயற்கை நுண்ணறிவின் ஊடுருவல் மற்றும் அமெரிக்க அரசின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவை இந்த வேலை நீக்கத்துக்குப் பின்னால் இருக்கும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.குறிப்பாக, ‘ஏ.ஐ’ மீதான பயம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், ‘ஏ.ஐ வேலைகளைப் பறிக்கிறது’ என்று ஒரு தரப்பு சொல்ல, இன்னொரு தரப்போ… ‘ஏ.ஐ வேலைகளைப் பறிக்காது. புதிய வேலை உருவாக்கும்’ என்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பட்டிமன்றம் நீண்டுகொண்டிருக்கும் நிலையில்தான், டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி ஐ.டி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ‘2022 முதல் 2024 வரையிலான காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது’ என்கின்றன புள்ளிவிவரங்கள்.

அதேசமயம், ‘ஐ.டி துறையில்தான் எதிர்காலம்’ என்ற பிம்பமும் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்களும் பெற்றோர்களும் இதையே நம்பிக்கொண்டுள்ளனர். பொறியியல் கல்லூரிகளும், இதர ஐ.டி துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்களும் இதையே தங்களுடைய தூண்டிலின் இரையாகப் பயன்படுத்தி ‘வணிகம்’ நடத்திவருகின்றன.

இந்நிலையில், இந்திய ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘நாஸ்காம்’, “செயற்கை நுண்ணறிவும் ஆட்டோமேஷனும் ஐ.டி நிறுவனங்களின் செயல்பாடு களையே மாற்றியிருக்கின்றன. இதற்கேற்ப ஊழியர்களின் திறமைகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிறுவனங்களின் ஏ.ஐ அடிப்படையிலான பணித் தேவைகளுக்கும், ஐ.டி பட்டதாரிகள், பணியாளர் களுடைய திறன்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் ஒவ்வொருவரும் அப்டேட் ஆக வேண்டும்” என்று வலியுறுத்துகிறது.

ஆக மொத்தத்தில், ‘இந்தியாவின் எதிர்காலம்’ எனச் சொல்லப்படும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்பது மட்டும் உண்மை.ஏற்கெனவே, பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில்தான் படித்துப் பட்டம் பெற்று, படாதபாடுபட்டு வேலைகளில் சேர்ந்துவருகின்றனர், நம் இளைஞர்கள். ஆனால், கடைசியில் நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருந்தால், அது இந்தியப் பொருளாதாரத்துக்கே பெரும் சவாலாக மாறி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சவாலை எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்கிற கேள்விக்குத்தான் இப்போது முக்கியமாக விடையைத் தேட வேண்டும். அந்தப் பொறுப்பு, நம் ஆட்சியாளர்களிடம்தான்!

என்ன செய்யப்போகிறீர்கள் ‘மாண்புமிகு’க்களே?

– ஆசிரியர்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *