• August 1, 2025
  • NewsEditor
  • 0

ரு மனிதனின் அடிப்படை தேவைகள் என்னென்ன என்ற கேள்விக்கு, உணவு, உடை, இருப்பிடம் என பள்ளிக்கூடத்தில் பதிலளித்திருப்போம். ஆனால், அவை பல தலைமுறைகளாக கிடைக்கப்பெறாத மக்களும் நமக்கு நடுவே பாதையோரங்களில் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

கானா பாடகரும், சார்பட்டா பரம்பரை, பாரிஸ் ஜெயராஜ் போன்ற பல படங்களில் கானா பாடல்கள் எழுதிய மெட்ராஸ் மிரனும், பிராட்வேயின் பாதையோர குடும்பஸ்தன்தான்.

விகடன் மாணவர் பயிற்சித்திட்டத்தில், முதல்முறையாக பிராட்வேயில் ஃபீல்டு ரிப்போட்டராக களமிறங்கியபோது, மகிழ்ச்சியும் அதிர்ச்சியுமாய் மெட்ராஸ் மிரன் அண்ணனையும் சந்தித்தேன். எங்கிருந்து வந்திருக்கிறேன், எதற்காக வந்திருக்கிறேன் என்பது தெரிந்ததும் வாஞ்சையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

கானா பாடகர் மெட்ராஸ் மிரன் குடும்பம்

”பூட்டன், பாட்டன், தாத்தா, அப்பா, இப்போ நானுன்னு நாலைஞ்சு தலைமுறையா இங்க தான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம் தம்பி. எனக்கும் கல்யாணமாகி, மூணு பசங்க இருக்காங்க. நல்லா படிக்கிறாங்க. படிப்புதானே எல்லாத்தையும் மாத்த முடியும்னு சிரிக்கிறவர், இதான் நம்ம வீடு. உள்ள வாங்க”ன்னு கூப்பிட்டார்.

சேர்ந்தாற்போல ஆறு பேர் நிற்க முடியாத இடம். ஒரு மின்விசிறி. நிமிர்ந்தால் தலையில் முட்டுகிறது. ஒரு கட்டில், அதன் மேலே இரண்டு, மூன்று துணி மூட்டைகள். ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. வீட்டில் வசிக்கும் நான்கு குருவிகள். அவ்வளவுதான், அவர் வீட்டின் சொத்து மதிப்பு. ஆனால், வசதியான வாழ்விடம் என்று நிறைவாகச் சொல்கிறார். மெட்ராஸ் மிரன் தற்போது சட்டம் படித்துக்கொண்டிருக்கிறார். மனைவி சித்ரா பழக்கடையில் வேலைபார்க்கிறார்.

பிராட்வே நடைபாதவாசிகள்
பிராட்வே நடைபாதவாசிகள்

”சமைக்க, படிக்க, படுக்க, பொருள்களை வெச்சுக்க, குளிக்க எல்லாத்துக்கும் சேர்த்து இந்த பத்துக்கு பத்து இடம்தான். சாக்கடை, குப்பை எல்லாத்தையும் சுத்தமாக்கி சென்னையை சுத்தமா வெச்சுக்கிறோம். மீன்பாடி வண்டி ஓட்றது, சாவுக்கு ஆடுறது, செருப்பு தைக்கிறது, மூட்டை தூக்குறது, லோடு எடுக்கிறது, பறை அடிக்கிறதுன்னு இன்னும் நிறைய நிறைய உடலுழைப்பு செஞ்சிதான் வாழுறோம். ஆனா, சமூகம் இத எங்க உழைப்பா பார்க்காம பாதையோரத்துல வாழுறவங்கதான் இந்த வேலைங்களை செய்யுறதுக்கு பொறந்திருக்காங்கன்னு பார்க்குது” என்கிறார் ஆதங்கமாக. மெட்ராஸ் மிரனைத்தொடர்ந்து இன்னும் பலர் தங்களை ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள்.

”படிப்பு, வேலை, தூங்குறதுக்கு ஒரு இடம், குளிக்க தனியா ஒரு ரூம், ஜன்னல் வெச்ச டாய்லெட், உடம்புக்கு ஏதாச்சும் வந்தா தரமான மருத்துவம்னு மத்தவங்க மாதிரியே நாங்களும் வாழ ஆசைப்படுறோம். இதுக்கு மேல கூடுதலா நாங்க எந்தக் கனவும் காணலியேங்க”

ரோடு தான் எங்க வீடுன்னா, இதுக்குள்ள ஒருநாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் வந்துபோறாங்க தெரியுமா
ரோடு தான் எங்க வீடுன்னா, இதுக்குள்ள ஒருநாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் வந்துபோறாங்க தெரியுமா?

”எங்களுக்கும் ஓட்டுரிமை இருக்குங்க. நாங்க ஒண்ணும் அகதிங்க கிடையாது. உங்களோட சக மனுசங்கதான் நாங்களும். எங்களை ஏன் ஏளனமா பார்க்கிறீங்க?”

”ரோடு தான் எங்க வீடுன்னா, இதுக்குள்ள ஒருநாளைக்கு எத்தனை ஆயிரம் பேர் வந்துபோறாங்க தெரியுமா; உங்க வீடுகளுக்குள்ள மத்தவங்களை நீங்க இப்படி நடக்க விடுவீங்களா?”

”ஏதோ ஒரு தலைமுறையில பிழைக்கிறதுக்காக இங்க வந்தோம். இப்போ, அநாதைங்க மாதிரி அம்போன்னு நிக்கிறோம். வெயிலோ, மழையோ, பனியோ எல்லாத்துக்கும் எங்களுக்கு இந்த மரத்தடிதான் கூரை. கைக்குழந்தைகளை வெச்சிக்கிட்டு மரத்தடியில வாழுறது எவ்ளோ கொடுமைன்னு உங்க யாருக்குமே புரியாது. பொம்பளை பிள்ளைங்களுக்கு பாதுகாப்பா டாய்லட் இல்லைன்னா அவங்க தினம் தினம் என்ன மாதிரி அவமானப்படுவாங்கன்னு உங்களால யோசிச்சுக்கூட பார்க்க முடியாது.”

பிராட்வே நடைபாதை
பிராட்வே நடைபாதை

”எங்க புள்ளைங்கன்னாலே பீடி, குடி, கஞ்சான்னு இருப்பாங்கன்னு நினைச்சிட்டிருக்காங்க. அப்படி ஒட்டுமொத்தமா எல்லாரையும் நினைச்சிடாதீங்க. உண்மையில, இங்க இப்படி வாழறதாலேயும், இந்த சமூகம் எங்களை ஏளனமா பார்க்கிறது தாங்காமத்தான் சில புள்ளைங்க இப்படி ஆயிடுறாங்க. உங்க எல்லார்கிட்டயும் நாங்க கேட்கிறது ஒண்ணுதான். எங்களையும், எங்க புள்ளைங்களையும் சமமா, மரியாதையா நடத்துங்க.”

அவர்களின் ஒவ்வொருவரின் பேச்சிலும், கேள்விகளிலும் ஆயிரக்கணக்கான வலிகளும், ஏக்கங்களும்… அத்துனையையும் கேட்கையில் தொண்டை அடைக்கிறது.

மெட்ராஸ் மிரன்
மெட்ராஸ் மிரன்

மெட்ராஸ் மிரன் மறுபடியும் பேச ஆரம்பித்தார். ”எங்க மக்களோட பிரச்னைக்கெல்லாம் தீர்வு படிப்பும் வேலையும்தான். ஆனா, எப்படியாவது முன்னுக்கு வந்திடணும்னு படிச்சாலும், வேலைவாய்ப்பு முகாமெல்லாம் எங்க கண்லேயே படறதில்லை. இதுல வேலை தேடிப்போனா நிறம், சாதி, ஏரியான்னு எத்தனையோ சிக்கல் இருக்கு” என்கிறார், ஆற்றாமையுடன்.

சொந்த வீடு, நிம்மதியான தூக்கம், சுவையான சாப்பாடு, ஆரோக்கியமான வாழ்வு, உடுத்த நல்ல உடை, பட்டதாரி என்ற பட்டம், நல்ல வேலை, ஒரு நிம்மதியான கனவு போன்ற எதையும் பார்த்திடாத பாதையோர மக்களுக்கு என்ன பதில் வைத்திருக்கின்றன கடந்த கால மற்றும் நிகழ்கால அரசாங்கங்கள்..?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *