
தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம், புளியரை புதிய காவல் நிலைய கட்டுமான பணி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த நிலையில், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வேல்முருகன் கூறும் போது, “நிலுவையில் உள்ள 117 உறுதிமொழிகளில் இன்றைய தின ஆய்வின் போது 26 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டன. மீதமுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது” என்றார்.
மேலும், பழைய குற்றால அருவி யார் வசம் உள்ளது? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“பழைய குற்றால அருவியை பொறுத்தவரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதா அல்லது வனத்துறைக்கு சொந்தமானதா என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இது மாநில அளவிலான பிரச்னையாக கருதப்பட்டு, இரண்டு துறை செயலாளர்கள் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய ஒரு விஷயம் எனவும், இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “இரண்டாம் நாள் ஆய்வில், புகழ்பெற்ற குற்றாலம் அருவிக்கு நாடு முழுவதிலிமிலிருந்து சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் அங்கு பல்வேறு வசதி குறைபாடுகள் இருப்பதாகவும், அங்கு விற்கப்படும் உணவுப் பொருள்கள் தரமமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பதாகவும், பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடமிருந்து குழுவிற்கு பல்வேறு புகார்களும், கோரிக்கைகளும் வந்த நிலையில் இன்று அருவியை நேரில் பார்வையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தோம்” என்றார்.