
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்படுவதாக தேமுதிகவுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், கூட்டணி ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடத்தை அதிமுக வழங்கவில்லை. மாறாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் இடம் வழங்குவதாக அதிமுக அறிவித்தது. இதனால் தேமுதிக தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என்பதை தேமுதிக சூசகமாக தெரிவித்தது.