
கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). சிறுவயதிலேயே மீன் உள்ளிட்டவைகளை குறிவைத்து பிடிப்பதில் திறமைசாலியாக இருந்ததால் வேடன் என அழைக்கப்பட்டார். அந்த பெயரிலேயே மலையாள ராப் பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்தார் ஹிரண்தாஸ் முரளி. அவரது தாய் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். ராப்பர் வேடன் என பிரபலமான ஹிரண்தாஸ் முரளி நண்பர்களுடன் ஒரு அறையில் இருக்கும் போது போலீஸார் சோதனை நடத்தி அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்ததுடன் வேடனை கைதுசெய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரது கழுத்தில் புலிப்பல் டாலர் மாலை கிடப்பதாக வனத்துறை விசாரணை நடத்தியது. ராப்பர் வேடனை காவல்துறை பழிவாங்குவதாக அரசியல் கட்சியினர் கருத்துதெரிவித்தனர். அந்த வழக்கு மூலம் கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிரபலமானார் வேடன்.
‘கடலம்ம கரைஞ்ஞல்லே பெற்றது…’ என்ற ராப்பர் வேடனின் மலையாள பாடல் மொழிகளை கடந்து தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் அளவுக்கு பிரபலமானார் வேடன். இந்த நிலையில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார் ராப்பர் வேடன். இளம் பெண் டாக்டர் ஒருவர் திருக்காக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில் கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட இடங்களில் வைத்து தன்னை பாலியல்வன்கொடுமை செய்ததாக இளம் பெண் தெரிவித்துள்ளார். பின்னர் திருமணம் செய்யமறுத்ததால் அது மனதளவில் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும். அதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்ததால் புகார் அளிக்க தாமதம் ஆனதாகவும் இளம் பெண் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “திருமணம் செய்வதாக கூறி வேடன் தன்னை இரண்டு ஆண்டுகளாக ஆறு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் டாக்டர் புகார் அளித்துள்ளார். அதிலும் போதைபொருள்கள் பயன்படுத்திவிட்டு வந்து வன்கொடுமை செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஐ.பி.சி 376 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாலியல் வன்கொடுமை மட்டும் அல்லாது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையும் புகாரில் உள்ளது. விசாரணை முதற்கட்ட நிலையில் உள்ளது” என்றனர். இதற்கிடையே புகார் அளித்த பெண்ணுக்கு போனில் மிரட்டல் வருவதாகவும், வீட்டுக்கு சிலர் நேரில் சென்று மிரட்டல் விடுத்துவருவதாகவும்… இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு கேட்டு கோர்ட்டை நாட உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.