
தூத்துக்குடி: “சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை வைக்கிறார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்வதில் போலீஸாருக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக தேசிய அளவில் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் கவின் செல்வகணேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கவின் கொலையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. தென்மாவட்டங்களில் நடந்திருக்கிற அத்தனை கொலைகளுக்கு பின்னாலும் கூலிப்படையினரின் கைவரிசை இருந்திருக்கிறது.