
கன்னியாகுமரி மாவட்டம், தென் தாமரைகுளம் அருகே புவியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 60 ). 41 ஆண்டுகளுக்கு முன்பு காவலராக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றினார். பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 60 வயது நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று அவர் ஓய்வு பெற்றார். வழக்கமாக காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, பிரிவு உபசார விழா நடத்தி, தங்கள் துறை வாகனத்தில் சக ஊழியர்களும் அதிகாரிகளும் கெளரவமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். ஆனால் இன்று இய்வுபெற்ற பாலகிருஷ்ணன் கோட்டாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் பிரிவு உபசார விழா முடிந்தவுடன் அங்கிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் ஓடி தனது வீட்டை அடைந்தார். காலில் ஷூ, செருப்பு எதுவும் அணியாமல் அவர் தார் சாலையில் ஓடிச்சென்றார்.
ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்(எஸ்.எஸ்.ஐ) சாலையில் ஓடிச் சென்றதை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சர்யமுடன் பார்த்துச் சென்றனர். இதுபற்றி எஸ்.எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கூறுகையில், “நான் விழிபுணர்வுக்காகத்தான் 17 கிலோ மீட்டர் தூரம் ஒடி வீட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இளைஞர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார். இளைஞர்கள் போதை பொருட்களை பயன்படுத்தாமல் உடலை உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த ஓட்டம் மூலம் இளைஞர்களுக்கு உணர்த்தி உள்ளேன்.

தனது உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்த வழி. நம் உடலை உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், நம் பெற்றோரையும் பாதுகாக்க வேண்டும் என இளைஞர்களை மன்றாடி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். அதற்காகத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொண்டேன். வயது என்பது எண்ணிக்கைதான். சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை, போதை பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் உடலை உறுதி செய்யலாம்” என்றார்.