
பொதுவாக காக்கைகள் நம் அன்றாட பார்க்கக்கூடிய ஒரு பறவை இனமாகும். இவை மற்ற பறவைகளைக் காட்டிலும் அதிக அறிவாற்றல் திறனுக்காக தனித்துவம் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட நபர்கள் காகத்தை ஏதேனும் தொந்தரவு செய்தாலோ அல்லது அன்பாக உணவு பரிமாறினாலோ அதனை காக்கைகள் நினைவில் கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
காகங்களால் மனித முகங்களை பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருக்க முடியும் என்றும் தங்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்தவர்களையும் அன்பாக நடத்தியவர்களையும் வேறுபடுத்தி அறிய முடியும் என்றும் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
கோர்விடே என்ற இனத்தைச் சேர்ந்த காகங்கள் உணர்ச்சி மற்றும் அறிவாற்றலுக்காக பெயர் பெற்றவையாக விளங்குகின்றன. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஜான் மார்ஸ்லைஃப் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஆய்வில் காக்கைகள் தனிப்பட்ட மனித முகங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கடந்த கால நினைவுகளுடன் தொடர்புபடுத்துவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
எப்படி சாத்தியம்?
2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் ’குகை மனிதன்’ முகமூடி அணிந்து பல காக்கைகளைப் பிடித்து அவற்றிற்கு அடையாளம் காணும் வகை ஒரு குறியீடு செய்கிறார். பின்னர் அந்த முகமூடியை அணிந்த எவரையும் அல்லது வேறு யார் முகமூடி அணிந்திருந்தாலும் காக்கைகள் கடுமையாக தாக்கி கூட்டமாக எதிர்த்துள்ளன.
சாதாரணமாக இருப்பவர்களை அவை புறக்கணித்துள்ளன. இந்த சோதனை கிட்டத்தட்ட 2.7 ஆண்டுகள் நீடித்துள்ளன. பிடிக்கப்படாத காக்கைகளும் இந்த தாக்குதலில் இணைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டு காக்கைகளிடம் நடத்தப்பட்ட மூளை பரிசோதனைகளில் இந்த நடத்தை நரம்பியல் அடிப்படையிலானது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு முகமூடி அணிபவர்களை பார்க்கும்போது அவைகளுக்கு மூளையில் பயத்துடன் தொடர்புடைய பகுதிகள் செயல்பட்டுள்ளன. இதிலிருந்து தான் காக்கைகள் தாக்குதலில் ஈடுபட தூண்டப்படுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
காக்கைகள் எதிர்மறையான அனுபவங்களை மட்டும் தான் நினைவில் கொள்ளுமா? என்று கேட்டால், நேர்மறையான அனுபவங்களையும் அவை நினைவில் வைத்திருக்கின்றன. உணவு வழங்கிய அல்லது அச்சுறுத்தாத நபர்களை சந்திக்கும் போது அவை அமைதியாக அருகில் இருக்கின்றன. சில சமயங்களில் காக்கைகள் அன்பானவர்களுக்கு அவை தூக்கி வரும் பொருள்களை, பரிசாக அங்கே விட்டு செல்வதாகவும் அந்த ஆராய்ச்சி குழு தெரிவிக்கின்றது.