
தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவுடன் இணக்கமாக தனது போக்கை மாற்றினார். தர்மயுத்தம் தொடங்கி இபிஎஸ்ஸுடன் மீண்டும் இணைந்தது வரையிலும், ஏன்… அதன் பின்னரும் கூட ஓபிஎஸ்-ஸுக்கு பாஜக ஆதரவாக இருந்தது. ஒரு மாநில முதல்வர் கூட பிரதமரை சந்திக்க காத்திருக்க வேண்டிய நிலையில், மோடியையோ அல்லது அமித் ஷாவையோ சர்வசாதாரணமாக சந்திக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக உலா வந்தார். அவருக்கு டெல்லி மேலிடத்தில் இருந்த நெருக்கம் இபிஎஸ் தரப்பை எரிச்சலடைய வைக்கும் அளவுக்கு வளர்ந்தது.
ஆனால், அடுத்தடுத்த நிகழ்வுகள், அரசியல் போக்குகள் அவருக்கு பெரிதாக சாதகமாக அமையவில்லை. இந்தச் சூழலில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஓபிஎஸ் ராமராதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் வெற்றி பெறாவிட்டாலும் கூட, இரண்டாம் இடம் பிடித்தார். கிட்டத்தட்ட 40% வாக்குகளைப் பெற்று, தனக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கு மங்கிவிடவில்லை என்று உணர்த்தினார்.