
இலைக் கட்சியின் தலைமை மேற்கொள்ளும் சுற்றுப்பயணம், மாவட்ட நிர்வாகிகள் முதல் ஒன்றிய நிர்வாகிகள் வரை எல்லோரின் பர்ஸையும் பதம் பார்த்துக்கொண்டிருக்கிறதாம். ஆனால், டெல்டாவில் ‘கர்ம’மே கண்ணாக இருக்கும் மாஜி ஒருவர் மட்டும் அதிலிருந்து தப்பித்துக்கொண்டாராம். முன்னதாக, பயணத்துக்கான செலவு குறித்து நிர்வாகிகள் மாஜியை அணுகியபோது, “இந்தச் சின்னச் சின்னச் செலவுகளையெல்லாம் நீங்களே பார்த்துக்கோங்க… எலெக்ஷனுக்கான பெரும் செலவு மொத்தத்தையும் நானே ஏத்துக்கிறேன்” எனச் சொல்லி, தன் பர்ஸை இறுக மூடிக்கொண்டுவிட்டாராம்.
“இப்படிதான் நாடாளுமன்றத் தேர்தலின்போதும் சொன்னார்… ஆனா, நையா பைசாவை வெளியில் எடுக்கவில்லை. சரி, முடியாத ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆஸ்பத்திரி, ஹோட்டல், ஒப்பந்தப் பணிகள் எனச் செழிப்பாக இருந்தும், செலவு செய்யாமலேயே காலம் தள்ளுகிறார். அவரை வெச்சுக்கிட்டு இந்தத் தேர்தலைச் சந்தித்தால் அதோகதிதான். அவரை முதலில் மாற்றுங்கள்…” எனப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம் டெல்டா நிர்வாகிகள்!
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை, பிரதமர் மோடி சமீபத்தில் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட மாண்புமிகு ஒருவரின் உறவினர், அனுமதி இல்லாமல் வி.வி.ஐ.பி இருக்கைகள் பகுதியில் அமரச் சென்றாராம். இதைக் கண்காணித்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், ‘பாஸ் உள்ளவர்களுக்குத்தான் இங்கே அனுமதி…’ என அவரை அமரவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.
இதனால் பதறிப்போன மாண்புமிகுவின் ஆதரவாளர்கள் சிலர், ‘அவர் யார் தெரியுமா… அவரையே தடுக்கிறீர்களா…’ என வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதனால், அரங்கம் முழுவதும் சலசலப்பாக, வேறு வழியில்லாமல் மாண்புமிகுவின் உறவினருக்கு வி.வி.ஐ.பி இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கிறது. ‘உள்ளூரில் மாண்புமிகுவும் அவருடைய ரத்த சொந்தமும் செய்யும் அட்ராசிட்டிகள் போதாதென்று, இப்போது உறவினரும் களமிறங்கி விட்டார்போல… சரி… சம்பந்தமே இல்லாமல் பிரதமர் விழாவில் இவர் கலந்துகொண்டது ஏன்னு தெரியலையே…’ எனத் தலையைச் சொரிகிறார்கள் எதிர்க்கட்சியினர்!
பா.ம.க நிறுவனர் ராமதாஸின் புகாரைத் தொடர்ந்து, அன்புமணியின் நடைப்பயணத்துக்கு போலீஸ் தடை போடப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், ‘நடைப்பயணத்துக்கு எந்தத் தடையும் இல்லை’ என மண்டல ஐ.ஜி-க்களுக்கும், மாநகர காவல் ஆணையர்களுக்கும் அறிவுறுத்திவிட்டதாம் டி.ஜி.பி அலுவலகம். அதைத் தொடர்ந்து, தெம்பாக நடக்க ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி. “இந்த நடைப்பயணத்தின் நோக்கமே, அன்புமணியின் கட்டுப்பாட்டில் கட்சி இருப்பதாக, பெரியவருக்கும் பொதுமக்களுக்கும் புரியவைக்கத்தான்.
‘அன்புமணியின் நடைப்பயணத்துக்குப் போகக் கூடாது’ எனப் பெரியவர் நியமித்த நிர்வாகிகள், அரட்டலெல்லாம் விடுத்தார்கள். அதையெல்லாம் மீறித்தான் ஏற்பாடுகளைச் செய்கிறோம். தந்தையும் மகனும் ஒன்றுசேர வேண்டுமென எல்லோரும் விரும்பும் நிலையில், பெரியவருக்கு மிக நெருக்கமான ‘சிவ’ பிரமுகர்தான் ஏகத்துக்கும் குழப்பிவிடுகிறார். அறக்கட்டளைச் சொத்துகளைக் கைவசப்படுத்த முயல்கிறார். அவருடைய சதியால்தான், குடும்பம் ஒன்றுசேர முடியாமல் தவிக்கிறது” எனக் கொதிக்கிறார்கள் அன்புமணியின் ஆதரவாளர்கள்!
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நீண்டகாலமாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி ஒருவர், சமீபத்தில் இலைக் கட்சியில் ஐக்கியமாகியிருக்கிறார். அவர் பணியிலிருந்த காலகட்டத்தில், உள்ளூர் ஆவேசப்புள்ளிக்கு ஆல் இன் ஆலாக இருந்தவர். அந்த நட்பில், அந்த ஆவேசப்புள்ளி மூலமாகவே கட்சியில் இணைந்து, எம்.எல்.ஏ சீட்டும் கேட்டிருக்கிறார். ‘கேட்டது கிடைக்கும்…’ என்று வாக்கு கொடுத்து, கட்சியில் இணைத்துக்கொண்ட ஆவேசப்புள்ளி, அடுத்த சில நாள்களிலேயே ‘வந்த உடனே சீட் கேட்டா எப்படி… ஒரு அஞ்சு வருஷம் போகட்டும். அப்புறம் பார்த்துக்கலாம்…’ என அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ‘மலர்க் கட்சிக்குப் போகவிருந்த என்னை, நம்பிக்கை கொடுத்து கட்சியில் சேர்த்த பிறகு, அஞ்சு வருஷம் போகட்டும் என்கிறாரே… இப்படி நம்ப வெச்சு கழுத்தை அறுத்துவிட்டாரே…’ எனக் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அந்த முன்னாள் அதிகாரி!
தலைநகரில் இயங்கிவரும் பிரபல தனியார் கல்லூரியில், போதைப்பொருள் தொடர்பாக மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, இதே கல்லூரியில் ரெய்டு நடத்தப்பட்டு மாணவர்கள்மீது வழக்கு பாய்ந்ததோடு, அவர்களிடமிருந்து போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகும் அந்தக் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் நடமாட்டம் குறையவில்லையாம். அதனால்தான் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முறை ஆறு மாணவர்கள் உட்பட 12 பேரைக் கைதுசெய்திருக்கிறது ஸ்பெஷல் டீம். ஆனால் இந்த ரெய்டை, அரசியல் காழ்ப்புணர்ச்சி எனப் புலம்புகிறது கல்லூரி நிர்வாகம். ‘தலைநகரில் பிரபல தனியார் கல்லூரிகளிலெல்லாம் இது சர்வ சாதாரணமாக நடக்கிறது. ஆனால், மலர்க் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலேயே எங்களைக் குறிவைக்கிறது, மாநிலத்தை ஆளும் மேலிடம்’ என அதிர்ச்சி கொடுத்து, ஆதங்கப்படுகிறதாம் கல்லூரி நிர்வாகம்!