• July 31, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அதன் மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 129 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு சிப்காட் அமைப்பதற்கு கையகப்படுத்துவதை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திமுக தேர்தல் அறிக்கையில் உத்திரவாதம் அளித்ததை போல் மதுரையில் வேளாண் பல்கலைக்கழகத்தை அமைத்திட, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளையும், திட்டங்களையும், சட்டம்போட்டு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மூலம் தமிழகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த நிலங்களையும், கார்ப்ரேட் நிறுவனங்கள் அபகரித்து கொள்வதற்கு இந்த சட்டம் வழிவகுக்கிறது. நிலம் மட்டுமல்லாமல் நிலத்திற்கு அருகில் உள்ள குளம், குட்டைகளையும் அபகரிக்கவும் வழிவகுத்திருக்கிறது. சிப்காட்டிற்கு நிலத்தை கொடுக்க மறுத்தால் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கையும் தமிழகத்தில் தொடர்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தென்மாவட்ட வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட கோவிலாங்குளம் வேளாண் ஆராய்ச்சி மைய நிலத்திற்கு சொந்தமான 129 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் இது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் இதில் முதலமைச்சர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை கைவிட்டுவிட்டு, விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திமுக அரசு கொள்கை ரீதியாக செயல்படுத்தி வருகிறது. காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு 10 கி.மீ தூரத்திற்கு ஆறு வெட்டப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் இதுவரை அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை. மாநிலங்களுக்கிடையிலான குடிநீர் பிரச்சையில் பெறப்பட்ட உரிமைகளைக்கூட பறிகொடுக்கிறது. ஒட்டமொத்தமாக இந்த அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *