
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “வரும் 2026-ம் ஆண்டு தேர்தல் களத்திற்கு முதல் முதலாக வந்துள்ளது அ.தி.மு.கதான். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எங்களை வாழ வைத்த தெய்வங்கள்.
அ.தி.மு.க-வின் கடைக்கோடி தொண்டர் வரை அந்த உணர்வோடுதான் இருக்கிறோம். அவர்கள் இருவரும் மறையவில்லை. எங்கள் அனைவரின் உள்ளத்தோடும் உதிரத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
தமிழகத்தில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை வரவேற்கச் சிறப்பாகப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த எழுச்சி பயணத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்கிறார்.
மேலும் இந்த எழுச்சி பயணத்தில் பாஜக நிர்வாகிகளும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அது தொடர்பாக அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு என்னை அழைத்திருந்தனர்.
கடந்த 1998-ல் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர மற்ற கட்சிகள் யோசித்து வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, துணிச்சலாக முடிவெடுத்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார். அதில் 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றதன் காரணத்தினால்தான் பா.ஜ.க மத்தியில் முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தின் நலன் கருதி சில பிரச்னைகளை மையமாக வைத்து மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம்.

தீண்டத்தகாத கட்சியா?
கூட்டணியில் அ.தி.மு.க வெளியே வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தி.மு.க., வாஜ்பாய் தலைமையிலான அரசியலில் பங்கேற்று அவர்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டனர். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ‘தி.மு.க., பா.ஜ.க., உடன் சேர்ந்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் ஒன்று சேர்ந்தால் தீண்டத்தகாத கட்சியா?’ என்றுதான் கருத்து கூறினேன்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தில் தவறுதலாக அரசியல் காரணங்களுக்காகத் திரித்துக் கூறப்பட்டிருக்கிறது.” என்றார்.