
கடந்த 26-ம் தேதி தெலங்கானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் OBC மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, “என் 21 வருட அரசியல் வாழ்க்கையில் ஏழைகள், எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர், பெண்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அவர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறேன். ஆனால், பிற்படுத்தப்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) விஷயத்தில் சறுக்கியிருக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாதது என் தவறுதான். கட்சியின் தவறில்லை. எனவே, தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதன் மூலம் என் தவறை சரிசெய்வேன். ” என வெளிப்படையாக காங்கிரஸின் மிக முக்கியப் பிரச்னைகளில் ஒன்றைப் போட்டுடைத்திருக்கிறார்.
இப்படி ராகுல் காந்தி பேசியிருப்பது முதல்முறையல்ல…
ஜனவரி 5, 2024 அன்று ராஞ்சியில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது, உரையாற்றிய ராகுல் காந்தி, “மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பை நடத்துவோம். பட்டியலினத்தவர்கள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் (OBC) ஓரங்கட்டப்பட்டு, கொத்தடிமைகளாகக் மாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என்றார்.
நான் பொய் சொல்கிறேன் என்று பொருள்:
கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி, டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கானப் பிரசாரத்தில்,“கடந்த 10 – 15 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்யவில்லை என என்னால் சொல்ல முடியும். நான் இதைச் சொல்லவில்லை என்றால், நான் உங்களிடம் பொய் சொல்கிறேன் என அர்த்தம். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நான் சொன்னதுதான் யதார்த்தம். காங்கிரஸ் கட்சி பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் நம்பிக்கையைப் பேணியிருந்தால், ஆர்.எஸ்.எஸ் ஒருபோதும் ஆட்சிக்கு வந்திருக்காது.

நம்பிக்கையை இழந்து வருகிறோம்:
இந்திரா காந்தியின் காலத்தில், (பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்) முழு நம்பிக்கை பாதுகாக்கப்பட்டது. இந்திராகாந்தி தங்களுக்காகப் போராடி இறப்பார் என்பதை பட்டியலினத்தவர்களும், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெரும்பாலான பிற்படுத்தப்பட்டோர் அறிந்திருந்தனர். முழுமையாக நம்பினார்கள். ஆனால் 1990-களிலிருந்து, அந்த நம்பிக்கை குறைந்து வருகிறது. அதை என்னால் பார்க்க முடிகிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு பிரதிநிதித்துவம் மட்டுமல்ல அதிகாரமும் தேவை.
நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் இந்தியா, நீதித்துறை ஆகியவற்றில் அவர்களுக்கு அதிகாரப் பங்கு தேவை. அதிகாரப் பகிர்வுக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது” என்றார்.
இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி, சிறுபான்மையினருக்காகப் பேசியவர், ஒருகட்டத்தில் “எல்லாத் தவறுகளையும் காங்கிரஸ்தான் செய்தது. அதைச் சரிசெய்ய வேண்டும்” என நிழலிருந்து நிஜத்தின் பக்கம் முகத்தைத் திருப்பியிருக்கிறார்.
அப்படி காங்கிரஸ் என்னச் செய்தது என்பதை அறிந்துக்கொள்ள கடந்தக் கால காங்கிரஸின் பக்கங்களைத் தூசி தட்டினோம்.
இந்திய அரசியல் சாசன முதல் திருத்ததுக்கு முக்கிய காரணம் இப்போதைய தமிழ்நாடு – அப்போதைய மெட்ராஸ் மாகாணம்.
அரசு வேலை வாய்ப்புகளில் பிராமணரல்லாதோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென ‘நீதிக் கட்சி’ முதலமைச்சர் பனகல் ராஜா 1921 ஆகஸ்டில் இட ஒதுக்கீடுக்கான அரசாணையை (Communal G.O. 613) வெளியிட்டார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில்தான், தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி, `காங்கிரஸ் தமிழர்களுக்கு அல்ல; இது பார்ப்பனர்களுக்கும் வேளாளர்களுக்கும் உரியது” எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மெட்ராஸ் மாகாண அரசு Vs சம்பகம் துரைசாமி வழக்கு:
இதற்கிடையில், இந்தியா விடுதலைப் பெற்று, புதிய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 1950-ல் அமலுக்கு வந்தது. அதில் இட ஒதுக்கீடு தொடர்பாக எந்தப் பிரிவுகளும் இல்லை. எனவே, முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு `மெட்ராஸ் மாகாண அரசு Vs சம்பகம் துரைசாமி வழக்கு’ எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும், “சட்டப் பிரிவு 15(1)ன் படி, எந்த ஒரு குடிமகனையும் மதம், இனம், பாலினம், பிறந்த இடம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் அரசு பாகுபாடுடன் நடத்தக்கூடாது.” என தீர்ப்பளித்து, இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்புக்கு சென்னை மாகாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்ப, முதலமைச்சர் குமாரசாமி ராஜா தலைமையில் அமைச்சர்கள் குழு டெல்லிச் சென்று, பிரதமர் நேருவைச் சந்தித்து, தீர்ப்பின் தாக்கும் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம் என்ற ஆலோசனையை சட்ட அமைச்சகம் ஏற்கெனவே முன்வைத்திருந்தும், அப்போதைய பிதமர் நேரு, இந்த விவாதத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
அதன் பிறகு எழுந்த அழுத்தத்தால், ‘கல்வி மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பளிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை பிரிவு 15, பிரிவு 29 (2) ஆகியவை தடுக்காது’ என்ற திருத்தம் முன்வைக்கப்பட்டது. இதற்கான விவாதத்தில் டாக்டர் அம்பேத்கர் தனது வாதத்தை மிகக் கடுமையாக முன்வைத்தார்.
முதல் பொதுத் தேர்தல் 1952-ல் நடக்கவிருந்த நிலையில், தற்காலிக நாடாளுமன்றம், இந்தத் திருத்தத்தை நிறைவேற்றியது.
காகா காலேல்கர் ஆணையம்:
காந்திய சமூக சீர்திருத்தவாதியாக கருதப்பட்ட காகா காலேல்கர் என்று பிரபலமாக அறியப்பட்ட தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர், அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தலைமையில், ‘முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணைய’த்தை அரசியலமைப்பின் 340-வது பிரிவின்படி, 1953 ஜனவரி 29 அன்று முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமைத்தார்.

பல்வேறு ஆலோசனைகளுடன் இந்த ஆணையம் 1955 மார்ச் 30 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதே நேரம் அந்த ஆணையத்தில் இருந்த அனைவரின் கருத்தும் ஒன்றுபட்டு இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தது. மேலும், அந்த ஆணையத்தில் இருந்த வழக்கறிஞர் சிவதயாள் சிங் சௌராசியா மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர். இவர் ‘ஆணையத்தின் விவாதங்கள் ஒருதலைபட்சமாக இருக்கிறது’ என ஆணையத்துக்கு எதிராக 84 பக்க எதிர்ப்புக் குறிப்பை எழுதி சமர்பித்தார்.
அதைத் தொடர்ந்து, அந்த அறிக்கை குறித்து மிகுந்த சர்ச்சை எழுந்ததால், கலேல்கர் குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ‘ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு சரியானதா என்ற சந்தேகத்திற்கு வழிவகுத்தது. அதனால், 1961-ல் அது நிராகரிக்கப்பட்டது.
அதற்குப் பிறகு, ஒவ்வொரு மாதமும் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கம் இருந்த நேரு, 1961 ஜூன் 27 அன்று மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில், “நாம் பழமையான பழக்க வழக்கங்களிருந்து வெளிவர வேண்டும் என்பதை முன்மொழிகிறேன். குறிப்பாக, ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு (reservation) நடைமுறையை நாம் கடைபிடிக்கக்கூடாது. சமீபத்தில் அனைத்து முதலமைச்சர்களும் கலந்துக்கொண்ட தேசிய ஒற்றுமை மாநாட்டில் ‘உதவி’ என்பது சாதி அடிப்படையில் அல்ல, பொருளாதார ஆதாரத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

சமூகமாக பின்னடைந்த சமூகங்களுக்கு சிறந்த கல்வியை (முக்கியமாக தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவப் பயிற்சி) கொடுப்பது தான் முக்கியம். அனைவருக்கும் இலவச கல்வி, ஒவ்வொரு கல்வி நிலைக்கும் திறமையான மாணவர்களுக்கு, பரவலாக scholarship வழங்குவது என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தொடர்ந்து மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவர்களின் மட்டத்தில் அடையாளம் கண்டு, அவர்களை முக்கிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்கு பொருத்தமான வசதிகளை வழங்க வேண்டும் என முடிவு செய்தார் நேரு. ஆனால், அதை நிறைவேற்றுவதற்குமுன்பே 1964-ல் காலமானார்.
ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் நேருவின் முடிவுகள் தெளிவில்லாமல் இருந்திருப்பதை கவனிக்க முடியும்.
அவசரநிலைக்குப் பிறகு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. பிரதமர் மொரார்ஜி தேசாய் 1979 மார்ச் 21 அன்று பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் மண்டல் ஆணையத்தை அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையைத் தயாரிக்கும் நேரத்தில், ஜனதா கட்சி அரசு கவிழ்ந்து, தேர்தல் நடைபெற்று, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்றார்.

ஆனால், அவர் மண்டல் ஆணையத்தை கலைக்கவோ அல்லது அவர்களின் பணிகளைத் தடுக்கவோ இல்லை. உண்மையில், இந்திரா காந்தியின் பதவிக்காலத்தில், 1980-ம் ஆண்டு, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 என ஆணையத்தின் பதவிக்காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.
மண்டல் கமிஷன் ஓ.பி.சி.க்களுக்கு 27% இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்த அறிக்கையை டிசம்பர் 31 அன்று காங்கிரஸ் தலைவரும் உள்துறை அமைச்சருமான கியானி ஜெயில் சிங்கிடம் சமர்ப்பித்தது. அறிக்கையை சமர்ப்பிக்கும் போதுகூட பிபி மண்டல், அரசின் ஆதரவுக்கு இந்திரா காந்திக்கு நன்றி தெரிவித்தார். இந்திரா காந்தி தனது பதவிக் காலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையைத் தயாரித்தார் என்பதை மறுக்க முடியாது.
இருப்பினும், அதன் அறிக்கை மீது இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதன் காரணமாகவே வட இந்தியாவின் அரசியல் அமைப்பே மாறியது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் வெளிச்சம் பெற்ற முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத், நிதிஷ் குமார் , பெனி பிரசாத் வர்மா, சரத் யாதவ் போன்ற தலைவர்கள் தேசிய அளவில் பிரபலமாகி, உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழக்க வழிவகுத்தது.

மண்டல் கமிஷன் அறிக்கையும் – ராஜீவ் காந்தியும்:
1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. வி.பி சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றி, மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தியது. இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, பா.ஜ.க தலைவர்கள் அத்வானி, வாஜ்பாயி போன்ற தலைவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதை கடுமையாக எதிர்த்தனர்.
ராஜீவ் காந்தியின் மூன்று மணி நேர நாடாளுமன்ற உரையில், மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்துவதை எதிர்த்தது மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள அவரது கட்சியின் அரசுகள் இடஒதுக்கீட்டின் வரம்பை விரிவுபடுத்துவதில் தவறு செய்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.
தோல்வியை ஒப்புக்கொண்ட ராஜீவ் காந்தி:
அதே நேரம் காங்கிரஸ் உறுப்பினர்களான சீதாராம் கேசரி உட்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதை நாடாளுமன்றத்திற்கு வெளியே பாராட்டினர். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதற்கிடையில், காங்கிரஸும் – பாஜகவும் சேர்ந்து வி.பி சிங் அரசை கவிழ்த்தது. அதைத் தொடர்ந்து 1991-ல் நடந்த தேர்தலில், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தது.

எனவே, மண்டல் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்ச நீதிமன்ராம் 1992 நவம்பர் 16 அன்று இடஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
அதன் பிறகு காங்கிரஸ் அரசு, 1993 செப்டம்பர் 8 அன்று மண்டல் அறிக்கையை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. மண்டல் அறிக்கை செயல்பாட்டுக்கான அறிவிப்பு வந்தபோது ராஜீவ் காந்தி அளித்த ஒரு நேர்காணலில், மண்டல் கமிஷன் விவகாரத்தில் கட்சிக்குள்ளேயே தனது கருத்து நிராகரிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, காங்கிரஸ் இடஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான திட்டத்தை ஆகஸ்ட் 21, 2007 அன்று காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. அதற்குப் பிறகுதான், IIT, IIM, AIIMS, JNU உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிரபலமான பல்கலைக்கழகங்களிலும் ஒபிசி உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் படிப்பதற்கான தாராள சூழல் உருவானது.
2010-ம் ஆண்டில், இரண்டாம் முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது, சாதி கணக்கெடுப்புக்கான நடவடிக்கையைத் தொடங்கியது. அப்போதைய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி /சமூகத் தரவுகளைச் சேகரிப்பது குறித்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். ஆனால், மார்ச் 1, 2011 அன்று, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் மக்களவையில் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தார். ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசு முழு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை (SECC) நடத்த முடிவு செய்தது.
SECC தரவுகள், கிராமப்புற மேம்பாடு, வீட்டுவசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகங்களால் 2016-ம் ஆண்டு முறையே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. இருப்பினும், அந்தத் தரவுகள் கிடைக்கவில்லை, மேலும் அது நம்பகமானது அல்ல என பிரதமர் மோடி அரசு தெரிவிக்கிறது.
துல்லிய மதிப்பீடுகள் இல்லை:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 27% இடஒதுக்கீட்டில் 2,600க்கும் மேற்பட்ட சாதிகளை மத்திய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது. மண்டல் கமிஷன், ஓ.பி.சி.க்கள் மக்கள்தொகையில் 52% என்று கூறியிருக்கிறது. அக்டோபர் 2006 -ம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (National Sample Survey Organisation) 61-வது சுற்றின் ஆய்வறிக்கையில் மக்கள்தொகையில் ஓ.பி.சி 41% என்று மதிப்பிடுகிறது. எனவே, இந்தியாவின் ஓ.பி.சி. மக்கள்தொகை குறித்து இதுவரை துல்லியமான மதிப்பீடு எதுவும் இல்லை என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை காங்கிரஸ் இப்போது உணர்ந்திருக்கிறது.

ராகுல் காந்தியின் கருத்து குறித்து மூத்தப் பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் அய்யநாதனிடம் பேசினோம். அவர், “காங்கிரஸ் ஓ.பி.சி-க்கு எதுவும் செய்யவில்லை என்பதை விட, சமூக நீதி கொடுப்பதற்கு எதிராகத்தான் வரலாற்றில் இருந்திருக்கிறது. ராஜீவ் காந்தி மண்டல் அறிக்கையை எதிர்த்து 10 மணி நேரம் பேசினார். அப்போது பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே நேர்கோட்டில் இருந்தார்கள். ஒரு பக்கம் அத்வானி, வாஜ்பாய் இன்னொரு பக்கம் ராஜீவ் காந்தி எனக் கடுமையான எதிர்ப்புகள் வந்தது. அதன் காரணமாகதான் இருகட்சிகளும் சேர்ந்து வி.பி சிங் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். ராகுல் காந்தி சொல்வதுகூட தவறுதான். காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்பதைவிட செய்வதைக்கூட தடுத்தது.
தேர்தல் அரசியல் – கொள்கை அரசியல்
பட்டியலினத்தவர், பழங்குடியினர், முற்பட்ட சாதியினரின் வாக்குகளைதான் காங்கிரஸ் முழுமையாக சார்ந்திருந்தது. ‘பிசி-யில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை’ என இந்திரா காந்தி பேசியதை மூப்பனார் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இப்போது ராகுல் காந்தி, அவரின் கட்சியின் மூதாதையர்களின் கருத்துக்கு நேர் எதிர் நிலைப்பாட்டு முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்குரிய இட ஒதுக்கீடை வழங்கி, உரிய பிரநிதித்துவத்தை தர வேண்டும் என்ற நிலைபாட்டை எடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில், மக்களிடம் ராகுல் காந்தியின் பேச்சு எடுபடும். பிரதமர் மோடி ஆயிரம் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், தேர்தல் முறைகேடும், இவிஎம்-மும் தான் அவரின் வெற்றிக்கான சூத்திரம்.

பாஜகவும் பிற்படுத்தப்பட்டவர்களும்:
பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முழுமையாக பா.ஜ.க-வை கழற்றிவிட்டனர். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க சரிவை சந்தித்தற்கு காரணமும் இதுதான். பீகாரில் அப்படி இழந்துவிடக் கூடாது என்பதற்காகதான் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பிரதமர் மோடி தலையசைக்கிறார். மோடியின் அரசியல் தேர்தலுக்கானது. ராகுல் காந்தியின் அரசியல் கொள்கைக்கானது.
நேருதான் முதலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக காகா காலேல்கர் கமிஷனை அமைத்தார். ஆனால், அந்தக் கமிஷனே, அவர்களின் அறிக்கையை பெரிதாகப் பொருட்படுத்த வேண்டாம் எனக் கூறிவிட்டது. அந்தக் கமிஷனின் தலைவர் காகா காலேல்கர் பிராமணர்.
பிற்படுத்தப்பட்டவர்களும், பழங்குடிகளும் அரசு பணிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு ஆபத்து என நினைத்தார்கள். அதனால் அந்தக் கமிஷனையே எதிர்த்தார்கள். இட ஒதுக்கீட்டுக்காக தந்தை பெரியாரின் போராட்டத்தைத் தொடர்ந்து, முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தவரே பிரதமர் நேருதான். அவர் இட ஒதுக்கீட்டு ஆதரவாகதான் இருந்தார்” என்றார்.
எது எப்படியானாலும் கடந்துவந்தப் பாதையிலிருந்து காங்கிரஸூம் அதன் தலைவர்களும் பாடம் கற்றுக்கொண்டு, நாட்டுக்கு எதாவது நல்லது நடக்கிறதால் சரி என்ற எண்ணம் மட்டுமே நமக்கு மேலோங்கி இருக்கிறது.