• July 31, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: பொழுதுபோக்காக டிரெக்கிங் செல்வோர், ஆன்மிகப் பயணங்களுக்காக மலைக்கோயில்களுக்குச் செல்வோர் பலர் இருக்கிறார்கள். இப்படிச் செல்வோரில் சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.  மலை ஏறும்போது மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமா, யாருக்கு அந்த ரிஸ்க் அதிகம், அதைத் தவிர்க்க வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன். 

பொழுதுபோக்கவோ, கடவுளை தரிசிக்கவோ இப்படி மலை ஏறிவிட்டு, சடலமாகத் திரும்புவது என்பது ரொம்பவும் துரதிர்ஷ்டசமானது. பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றுவது, சரியான உடல் எடையில் இருப்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருப்போருக்கு இதுபோன்ற ரிஸ்க் ஏற்படுவதில்லை. 

அடிக்கடி மலை ஏறி பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்காது. அதுவே, மலை ஏறுவதில் எந்த முன் அனுபவமும் இல்லாமல், உடல் அதற்குத் தயாராகாமல் முதல்முறை மலை ஏறுபவர்களுக்குத்தான் இந்த ரிஸ்க் அதிகம்.  அதேபோல, சிலருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைகள் இருந்திருக்கலாம். அவர்கள் பரிசோதனையே செய்திருக்க மாட்டார்கள். அதனால். அந்தப் பிரச்னை இருப்பதே தெரியாமல் இருப்பார்கள். அந்த நிலையில் அவர்கள் மலை ஏறும்போதும் பிரச்னை வரலாம். மலை ஏறும்போது இதயத்துடிப்பு அதிகமாகி, இதயத்தின் இயக்கமும் அதிகரிக்கும். அதனால் இதயம் சிரமத்துக்குள்ளாகலாம். 

மலையேற்றம்

எனவே, மலையேற்றம் மாதிரி, உங்களுக்கு அறிமுகமில்லாத புதிய செயல்களில் இறங்கும்போது, எந்தத் தயாரிப்புமின்றி அதைச் செய்யாமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதயத்தைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

டிரெட்மில் டெஸ்ட் என்ற எளிமையான பரிசோதனையே போதுமானது. டிரெட்மில்லில் உங்களை நடக்கவிட்டு, உங்கள் இதயத்துடிப்பு எப்படியிருக்கிறது, ரத்த ஓட்டமும், ஆக்ஸிஜன் அளவும் எப்படியிருக்கிறது என்று கவனிக்கப்படும்.  அதில் எந்தச் சந்தேகமும் பிரச்னையும் இல்லை என்றால், மருத்துவர் உங்களை மலையேற அனுமதிப்பார். ஆனால், அதை உறுதிசெய்யாமல் மலையேற்றத்துக்குத் தயாராக வேண்டாம்.  அப்படியே மலையேறத் தயாரானாலும் அதிக தூரம் மற்றும் நீண்ட நேரம் செல்வதைத் தவிர்த்து, மெள்ள மெள்ள வேகத்தையும் தூரத்தையும் அதிகரிக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *