
“நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது, கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டாக சதி செய்த படுகொலையாகவே தெரிகிறது.” என்று எவிடென்ஸ் கதிர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பாளையங்கோட்டையில் பொறியாளர் கவின் என்ற செல்வகணேஷ் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கள ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள மதுரை எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் பேசும்போது, “திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கடந்த 27 ஆம் தேதி பட்டியல் சமூகத்தை சேர்ந்த கவின் என்ற செல்வகணேஷை, பிற்பட்ட சாதியை சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டி கொடூரமாக ஆணவக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எவிடென்ஸ் சார்பில் உண்மை அறியும் குழு நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சென்னையில் பொறியாளராக பணியாற்றும் கவின் என்ற செல்வகணேஷும், திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணியாற்றும் சுர்ஜித்தின் அக்கா சுபாஷினியும் ஒரே பள்ளியில் படித்ததால் கடந்த 10 ஆண்டுளாக நண்பர்களாக இருந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக காதலித்தும் வந்துள்ளனர்.கவின்

காவல்துறையில் பணியாற்றி வரும் சுபாஷினியின் பெற்றோர் சரவணன் – கிருஷணகுமாரி காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 6 மாதத்திற்கு முன் சுபாஷினி, கவின் செல்வகணேஷின் தாயார் தமிழ்ச்செல்வியிடம் ‘நான் உங்கள் மகனை காதலிக்கிறேன், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன், உங்களை சந்தித்து பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு தமிழ்ச்செல்வி, ‘நீங்கள் வேறு சமூகம், நாங்கள் வேறு சமூகம், இது சரிப்பட்டு வராது, தயவு செய்து என் மகனை மறந்துவிடு’ என்று கூறியுள்ளார். ஆனாலும், இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர்.
தமிழ்ச்செல்வி, தன் மகன் உயிருக்கு ஆபத்து ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சச்தில்தான் காதலை ஆதரிக்கவில்லை. சுபாஷினியின் தந்தை சரவணன் அடிக்கடி செல்வகணேஷின் அலைபேசியில் ‘என் மக்ளை மறந்துவிடு, இல்லையென்றால் நடப்பதே வேறு’ என்று மிரட்டி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கவின் செல்வகணேஷின் தாத்தா முத்துமாலை கீழே விழுந்ததில் காயம் ஏற்பட அவருக்கு திருச்செந்தூரில் சிகிச்சை எடுத்திருக்கின்றனர். இதை அறிந்த சுபாஷினி, கவின் செல்வகணேஷின் அலைபேசியில் தொடர்பு கொண்டு ‘தாத்தாவை எங்கள் மருத்துவமனைக்கு கொண்டு வாருங்கள், சிகிச்சை அளிக்கிறோம்’ என்று கூறியதை தன் தாயிடம் செல்வகணேஷ் தெரிவிக்க, ‘முதலில் சுபாஷினியை சந்தித்து சிகிச்சை குறித்த விவரத்தை கேட்போம்’ என்று கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து 27.07.2025 அன்று கவின் செல்வகணேஷ், இளைய மகன் பிரவீன், தன் தம்பி பாலகணேஷுடன் தமிழ்ச்செல்வி சுபாஷினி வேலை செய்யும் மருத்துவமனைக்கு சென்று அங்கு சுபாஷினியுடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு சுர்ஜித் வந்துள்ளார்.
அப்போது கவின் செல்வகணேஷை தனியாக அழைத்த சுர்ஜித், ‘நீங்கள் என் அக்காவை காதலிப்பது தெரியும், இது குதித்து உங்களிடம் பேசுவதற்காக என் அப்பா அம்மா காத்திருக்கிறார்கள்’ என்று சொல்ல, அதை நம்பி சுர்ஜித் வந்த இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.
பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்திய சுர்ஜித், ‘கீழே இறங்கு’ என்று கூற, இறஙகிய கவின் செல்வகணேஷை, ‘எவ்வளவு திமிர் இருந்தால் என் அக்காவை காதலித்திருப்பாய்?’ என்று கேட்டுக்கொண்டே ஆபாசமாகவும், சாதி ரீதியாக இழிவாகவும் பேசி, அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பிற்பகல் 2.30 மணியளவில் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பல சந்தேகங்கள் உள்ளது, யதேச்சையாக அக்காவை பார்க்க வந்ததாக சொல்லப்படும் சுர்ஜித்துக்கு எப்படி அங்கு கவினும், அவன் தாயாரும், தம்பியும், தாய் மாமனும் வருவது தெரியும்? அதற்கு முன்பே குறிப்பிட்ட இடத்தில் அரிவாளை எப்படி மறைத்து வைத்திருக்க முடியும்? நான்கு வெட்டுகளிலேயே கவினுக்கு உயிர் போயிருக்கிறது. கூலிப்படையினரைப்போல அவனது அரிவாள் வெட்டு இருந்திருக்கிறது. அப்படியென்றால் இது திட்டமிடப்பட்ட கூட்டு சதி படுகொலையாகவே தெரிகிறது. இச்சம்பவம் குறித்து பாளையஙகோட்டை காவல் நிலையத்தில் குற்ற எண் 396/2025 பிரிவுகள் 103 (1), 296(b), 49 BNS 2023 and 3(1)(r), 3(1)(s), 3(2)(v) SC/ST Act 2015 ஆகியவற்றி கீழ் வழக்கு பதிவு செய்து சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2017 முதல் தற்போது வரை 65 பேர் சாதி ரீதியாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 2017 முதல் 2021 வரை 3 ஆணவக் கொலைகள் மட்டும் நடந்ததாக அரசு சொல்கிறது. மு.க.ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவோம் என்றார், ஆனால், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் இருக்கும்போது எதற்கு ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் என்று விளக்கமும் கொடுத்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டும்தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். பிற்பட்ட சாதியினருக்குள் நடக்கு ஆணவக்கொலைக்கோ, அல்லது பட்டியல் சாதியினர் காதலிக்கும் பிற்பட்ட சாதிப் பெண்களை கொலை செய்யும் பிற்பட்ட சமூகத்தினரையோ, அல்லது பட்டியல் சமூகத்தினருக்குள் நடக்கும் ஆணவக்கொலையையோ பி.என்.எஸ் சட்டத்தின் கீழ்தான் வழக்கு பதிவு செய்ய முடியும்.

கடந்த 30 ஆண்டுகளில் 7 ஆணவக்கொலைகளுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டோருக்கு மாவட்ட நீதிமன்றம் மூலம் நீதி கிடைத்துள்ளது. திருநெல்வேலி கல்பனா, உடுமலைப்பேட்டை சங்கர், திருவாரூர் அமிர்தவள்ளி, நாகப்பட்டினம் அபிராமி, விருத்தாசலம் கண்ணகி-முருகேசன், ஓமலூர் கோகுல்ராஜ், மேட்டுப்பாளையம் வர்சினி-கனகராஜ் ஆகியோரின் வழக்குகளில்தான் தீர்ப்பு கிடைக்கப்பட்டுள்ளது. அதிலும் மேல்முறையீடு செய்து குற்றவாளிகள் விடுதலையாகிவிடுகின்றனர், அல்லது தண்டனையை குறைக்கவும் செய்கின்றனர். ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று 2018-ல் சக்தி வாகினி வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இன்னும் தனிச்சட்டம் இயற்றப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது” என்றார்.
மேலும், கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலையில், சதியில் ஈடுபட்ட சுபாஷினியின் பெற்றோர்களை கைது செய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் என்பது உள்பட இன்னும சில பரிந்துரைகளையும் கள விசாரணை அறிக்கையில் எவிடென்ஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.