• July 31, 2025
  • NewsEditor
  • 0

பால், தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குக்கூட சீஸ் பிடிக்கிறது. பிரெட்டில் தொடங்கி, பீட்ஸா போன்ற நவீன உணவுகளில் மட்டுமின்றி, இட்லி, தோசைக்குக்கூட சீஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகளைப் பல வீடுகளில் பார்க்கலாம். எப்படியோ உணவு உள்ளே போனால் போதும் என அம்மாக்களும் சீஸுக்கு ‘நோ’ சொல்வதில்லை. எடைக் குறைப்பு ஆலோசனைகளில் தடை விதிக்கப்படும் உணவுகளில் முதலிடம் சீஸுக்கு. யார் எவ்வளவு சீஸ் சாப்பிடலாம், எந்த வகையான சீஸ் சாப்பிடலாம், சீஸ் தரும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி விரிவான தகவல்கள் பகிர்கிறார், உணவியல் நிபுணர் சௌமியா.

Cheese

ஹலோமி (Halloumi), ப்ளூ (Blue), ப்ரீ (Brie), புராட்டா (Burrata)… என 500-க்கும் மேற்பட்ட சீஸ் வகைகள் இருப்பதாக உலகளாவிய உணவுப் பொருள்கள் தரக் கூட்டமைப்பு உறுதி செய்கிறது. இதில், சோடியம் குறைவான சீஸ், கொழுப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ், உப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ் முதலியவை தற்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன.

அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தேவையான கொழுப்புச்சத்து, அவற்றில் இருந்தே கிடைத்துவிடும். எனவே, சீஸ் சாப்பிட விரும்பும் அசைவப் பிரியர்களும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் குறைந்த கொழுப்புச்சத்துள்ள சீஸ் வகைகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

சீஸ் - அசைவம் சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்க
சீஸ் – அசைவம் சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்க

தொடர்ந்து, உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் சைவ உணவு மட்டும் உட்கொள்பவர்கள், அவர்களின் டயட்டுக்கு ஏற்ற அளவில் சீஸ் சாப்பிடலாம். குறிப்பாக சைவப் பிரியர்கள், கால்சியம் சத்து அதிகம் பெருகுவதற்கு சீஸ் மட்டுமில்லாமல், பால் உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. சீஸ் கெட்டுப்போகாமல் இருக்க, குளிர்ந்த, பதப்படுத்திய நிலையில் அதை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

கொழுப்புச்சத்து அதிகமுள்ள (Full fat cheese) சீஸ்களை வாரத்துக்கு ஒருமுறைக்கு மேல் சாப்பிடக்கூடாது. சீஸ் வாங்கும்போது அதிலுள்ள கொழுப்பின் அளவைப் பார்க்க வேண்டும். 100 கிராம் சீஸில் 17.5 கிராம் அளவுக்குக் கொழுப்பு இருந்தால் அது அதிகபட்ச அளவு, 3.1 கிராம் முதல் 17.5 கிராம் வரை இருந்தால் நடுத்தர அளவு, மூன்று கிராமுக்கும் குறைவாக இருந்தால் குறைந்த கொழுப்பு.

சீஸ் எப்படி, எப்போது சாப்பிடக் கூடாது?
சீஸ் எப்படி, எப்போது சாப்பிடக் கூடாது?

ஸ்வீட்டோடு சேர்த்து சீஸ் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடுவது, பல் சொத்தை, பல் ஈறுகளில் வலி போன்ற பல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் இப்படித்தான் தரப்படுகிறது. பெற்றோர் இதைத் தவிர்த்துவிட வேண்டும்.

கடைகளில் செய்யப்படும் பீட்சா, பர்கர் போன்றவற்றில் அதிகக் கொழுப்புச்சத்துள்ள சீஸ்தான் உபயோகப்படுத்தப்படும். எனவே, அவற்றையும் தவிர்த்துவிடலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பி.சி.ஓ.டி பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் (Obesity), இதயப் பிரச்னை உள்ளவர்கள் உணவில் சீஸ் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இரவில் சீஸ் சாப்பிடுவது செரிமானம் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

சீஸ்.. சில எச்சரிக்கைகள்
சீஸ்.. சில எச்சரிக்கைகள்

இன்று பர்கர், பீட்சா, சாண்ட்விச், சாலட் போன்றவற்றில் மட்டுமன்றி, தோசை, பிரெட் போன்றவற்றில்கூட சீஸ் வகைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதே நேரத்தில் அதிகமாக சீஸ் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும் என்ற பயமும் பலருக்கு உண்டு. அதையெல்லாம் மீறி, சீஸின் அந்த புளிப்புச்சுவைக்காகவே அதனை உட்கொள்பவர்கள் அதிகம்.

இப்போதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அதிகக் கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருள்களே அதிகம் விற்கப்படுகின்றன. எனவே, அவற்றை உட்கொள்வது ஆபத்து என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

`அந்தக் கொழுப்பு, அசைவ உணவான கோழிக்கறியில் சேர்ந்திருக்கும் கொழுப்பைவிடவும் ஆபத்தானது’ என்றும் சொல்கிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே. எனவே, சரியான அளவு, சரியான வகை சீஸை சரியான வயதில் உட்கொள்ள வேண்டியது அவசியம்.

குறைந்த கொழுப்புச்சத்துள்ள சீஸ், இதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், எலும்பு பாதிப்புகள் போன்ற பல பிரச்னைகளில் இருந்து உடலைக் காக்கும். குறிப்பாக, சீஸில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 அமிலம், புற்றுநோய் பாதிப்பை உருவாக்கும் செல்களைக்கூட எதிர்த்துப் போராடுமாம்.

லோ கொலஸ்ட்ரால் சீஸ்!
லோ கொலஸ்ட்ரால் சீஸ்!

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துகள் அதிகம் தேவை. சீஸில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் ஒரு சீஸ் ஸ்லைடு (Slide) உட்கொண்டால் நல்லது. அதையும் காலை நேரத்தில் சாப்பிடுவது சிறந்தது.

வளரிளம் பருவத்தினர், வாரத்துக்கு மூன்று முறை சீஸ் சாப்பிடலாம். இளம் வயதில் உட்கொள்ளும் கால்சியம் சத்துதான் பின்னாளில் எலும்புகளுக்கு உதவியாக இருக்கும் என்பதால், பால் சார்ந்த மற்ற உணவுகளையும் இந்த வயதினர் சாப்பிடலாம்.

பெண்களைப் பொறுத்தவரை, உடல்பருமன் மற்றும் கொழுப்புத் தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், வாரத்துக்கு ஒருமுறை மட்டும் சீஸ் சாப்பிடலாம். வளரிளம் பருவம் முதல் 25 வயது வரையில் குறைவான கொழுப்புச்சத்துள்ள சீஸ் வகைகளை, வாரத்துக்கு மூன்றுமுறை சாப்பிடலாம். மெனோபாஸ் காலத்தின்போதும் அதன் பிறகும் வாரத்துக்கு ஒருமுறை உட்கொண்டால் போதும். வளரிளம் பருவத்தில் சரியான அளவு சீஸ் சாப்பிட்டால், மெனோபாஸுக்குப் பிறகு எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படாது.

பொதுவாகவே 35 வயதைக் கடந்தவர்கள், உடலின் கொழுப்புச்சத்தை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது நல்லது. அதற்கேற்ப, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கொழுப்புச்சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும். இவர்கள் வாரத்துக்கு ஒருமுறை சீஸ் சாப்பிடலாம்.

‘சீஸ் எடுப்போம். கொண்டாடுவோம்!’

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *