
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.