
மதுரை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சுரேஷ்குமார் (28). இவர் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோர் காங்கேயம்பாளையம் அருகே நேற்று மாலை மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சுரேஷ் சென்றுள்ளார். ஏற்கனவே மது போதையில் இருந்த சுரேஷ் நண்பர்களிடம் மேலும் மது அருந்துவதற்கு பணம் கேட்டுள்ளார்.
இதனால் சுரேஷ் மற்றும் அவரின் நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாகவும் மாறியது. இந்த மோதலின்போது, ரகுபதி, முத்துக்கிருஷ்ணன், கரண் ஆகியோர் சுரேஷ் குமாரை மது பாட்டில் மூலம் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில், சுரேஷின் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை மறைப்பதற்காக நண்பர்கள் மூன்று பேரும் சுரேஷின் உடலை எரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் புதைத்துள்ளனர்.
பிறகு தங்களின் குற்றத்தை உணர்ந்த அவர்கள் 3 பேரும் இன்று மதியம் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல்துறையிடம் சம்பவம் பற்றி சொல்லிய நிலையில், அவர்கள் சுரேஷ் குமாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர்.



முதல்கட்ட விசாரணையில் சுரேஷின் உடலை முழுமையாக எரிக்க முடியவில்லை என்பதால் பயந்து காவல்துறையிடம் சரணடைந்தது தெரியவந்துள்ளது. சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.