
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஒரு கூலான கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு ஜாலியான மனிதரும் கூட என்பதை நெருக்கமாக பின்தொடரும் ரசிகர்கள் மட்டுமே அறிவர்.
சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட தோனி, மணமகனுக்கு நகைச்சுவையான ஆலோசனையை வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Dhoni-ன் நகைச்சுவைத் துணுக்குகள்
“திருமணம் ரொம்ப நல்ல விஷயம். நீங்க ரொம்ப சீக்கிரமா அத பண்ணிக்கிறீங்க. சிலருக்கு நெருப்போட விளையாட பிடிக்கும், மாப்பிள்ளை அப்படிப்பட்ட ஆள்போல” என ஜோக்கடித்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.
“இப்போது உத்கர்ஷுக்கும் (மாப்பிள்ளை) இந்த மாயை இருக்கும். எல்லா கணவர்களும் ஒரே படகில் தான் பயணிக்கிறோம். நீங்கள் உலகக் கோப்பை வென்றிருக்கிறீகளா இல்லையா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல” என தனது மண வாழ்க்கையைப் பற்றியும் சில வார்த்தைகளை உதிர்த்தார்.
மணமகளுக்கு ஆலோசனை கூறும் விதமாக, “உங்கள் கணவர் கோபமாக இருக்கும்போது அவரிடம் எதுவும் பேசாமல் இருங்கள். நாங்கள் 5 நிமிடங்களில் கூல் டவுன் ஆகிவிடுவோம். எங்களால் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும் என எங்களுக்குத் தெரியும்” என்றார்.
ஃபினிஷிங் டச்சாக, “இந்த ஜோக்குகளுக்கு ஏன் ஆண்கள் அதிகமாக சிரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை” எனக் கூறி சிரித்தபடி, மணமக்களை வாழ்த்தி வெளியேறினார்.
அவர் இறங்கும்போது விழாவிலிருந்த அனைவரும் தோனி தோனி என ஆர்ப்பரித்தனர்!