• July 30, 2025
  • NewsEditor
  • 0

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமானநிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், கடந்த ஜூலை 26-ம் தேதி தூத்துக்குடிக்கு வந்தார் பிரதமர் மோடி. விழாவை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் திருச்சிக்கு வந்து தங்கிய பிரதமர், அடுத்தநாள் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற சோழப் பேரரசர் ராஜேந்திரன் சோழனின் முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார். தூத்துக்குடியில், பிரதமருடன் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமரின் விமானத்திலேயே ஒன்றாக திருச்சிக்கு வந்ததாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள். கிட்டத்தட்ட அரை மணிநேரத்திற்கு மேலாக பிரதமரும் நயினாரும் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

திறப்பு விழாவில் மோடி

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலர், “தூத்துக்குடியில் பிரதமரின் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, சாலை மார்க்கமாகவே திருச்சிக்கு வருவதாகத்தான் நயினாரின் பயணத்திட்டம் முதலில் இருந்தது. திருச்சியில் பிரதமரை வரவேற்பதற்கான குழுவையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைத்திருந்தார் நயினார். யாரும் எதிர்பாராத வகையில், தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் கிளம்பும்போது, ‘நீங்களும் திருச்சிக்கு வருகிறீர்கள்தானே…’ என நயினாரிடம் கேட்டார் பிரதமர். அவசரமாக ஆமோத்தித்த நயினார், சாலை மார்க்கமாக அதிகாலைக்குள் திருச்சிக்கு வந்துவிடுவதாகவும், பிரதமரின் ரோடு ஷோவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டதாகவும் கூறினார். ‘இரவு நேரத்தில் ஏன் அவ்வளவுதூரம் காரில் பயணிக்கிறீர்கள். என்னுடனே விமானத்தில் வந்துவிடுங்கள்…’ என பிரதமர் மோடி அழைக்கவும், இன்ப அதிர்ச்சியாகிவிட்டார் நயினார் நாகேந்திரன். உடனடியாக எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையினரின் க்ளியரன்ஸ் அளிக்கப்பட்டு, பிரதமருடன் ஒன்றாக தனி விமானத்தில் ஏறினார் நயினார். அவருடன், டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் அரசு உயரதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் பிரதமரின் விமானத்தில் பயணித்தனர்.

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரத்திற்குள் தூத்துக்குடியிலிருந்து திருச்சிக்கு பிரதமரின் தனி விமானம் வந்துவிட்டது. இடைப்பட்ட நேரத்தில், சுமார் அரை மணிநேரத்திற்கு பிரதமரும் நயினாரும் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்திருக்கிறார்கள். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முதற்கட்ட சுற்றுப்பயணம் குறித்து விவரித்த நயினார், எதிர்பார்த்ததைவிட கூட்டம் கூடுவதாக கூறியுள்ளார். ‘ஒரு மாதமாக அவர் நம்முடைய தொடர்பிலேயே இல்லையே…’ என பிரதமர் கேட்கவும், அதுதொடர்பாக சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார் நயினார். தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து நயினார் அளித்திருக்கும் ரிப்போர்ட் தான், அந்த விமான பயணத்திலேயே சுவாரஸ்யம்.

நயினார் நாகேந்திரன் – மோடி

மத்திய அரசு நிதிப் பங்களிப்பில் பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதிலெல்லாம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகக் கூறியிருக்கும் நயினார் நாகேந்திரன், குறிப்பாக தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு அமைச்சர்களின் துறைகளில் ஊழலும் முறைகேடும் புரையோடிப் போயிருப்பதாக பற்றவைத்திருக்கிறார். அந்த அமைச்சர்களின் துறைகளில், மத்திய அரசின் நிதிப்பங்களிப்போடு சுமார் 26 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுவதாகவும், அதில் முறைகேடு நடைபெறுவதாகவும் பிரதமரிடம் கூறியிருக்கிறார் நயினார். அமைதியாகக் கேட்டுக்கொண்ட பிரதமர், அதனை விசாரிப்பதாக உறுதியளித்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம், தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பம் குறித்தெல்லாம் பிரதமரும் நயினாரும் பேசியிருக்கிறார்கள்” என்றனர் விரிவாக.

எடப்பாடி பழனிசாமி

ஏற்கெனவே, மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் அதில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் ஒரு ரிப்போர்ட்டை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது மத்திய தணிக்கைத்துறை. இந்நிலையில், தி.மு.க-வின் ஆறு அமைச்சர்களின் துறைகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக நயினார் பற்றவைத்திருப்பது, அரசியல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சில மனச்சங்கடங்கள் இருந்தாலும், அதனால் கூட்டணிக்குள் மனமாச்சரியம் உருவாகிவிடக் கூடாது என கவனமாகவே இருக்கிறதாம் டெல்லி. அதை நயினாரிடமும் அறிவுறுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *