• July 30, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

நம்ம ஊர் கல்யாணங்களில் பெண்ணழைப்பு என்பது மிக முக்கியமான, உணர்வுப் போராட்டங்கள் நிறைந்த, மகிழ்ச்சியான நிகழ்வு. கல்யாணத்திற்க்கு முதல் நாள் நல்ல நேரம் பார்த்து மாப்பிள்ளை வீட்டிலிருந்து சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் வெற்றிலைப் பாக்கு, தேங்காய், பழம், பூ, புடவை, மாலை என பலவித தட்டுகள் வைத்து முறை செய்து பெண்ணை அழைக்கச் செல்வார்கள். அவரவர் முறைப்படி நேரடியாக மண்டபத்திற்க்கு அல்லது மாப்பிள்ளை வீட்டிற்க்கு சென்று விட்டு பின் மண்டபத்திற்க்கு அழைத்துச் செல்வார்கள்.

திருமணம் என்பது எதிர்ப்பார்த்த சந்தோஷமான விஷயம்தான். ஆனால் அதை மீறிய ஒரு கலக்கம், அழுத்தம். “இந்த வீட்டை விட்டு போகப்போறோம்” என்று மணப்பெண்ணுக்கும், “பெண்ணைப் பிரியப் போகிறோம்” என்று பெற்றவர்களுக்கும், உற்றவர்களுக்கும் ஏற்படும் ஒரு உணர்வு, அதை சொல்லில் வடித்துவிட முடியாது.

மனதில் “கவலை பாதி, களிப்பு பாதி கலந்து செய்த கலவை நான்” னு அந்த உணர்வு போடும் ஆட்டம் மிகப்பெரிய கோலாட்டம்.

மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் வந்து நலங்கு வைத்து, சம்பிரதாயங்கள், விருந்து என அனைத்தும் முடிந்ததும், தொடங்கும் முக்கிய நிகழ்வு. வீட்டின் பெரியவர்கள் சாமிக்கு சூடம் ஏற்றி பெண்ணை ஆசீர்வதிக்கும் வண்ணம் திருநீறு, குங்குமம் வைத்து விடுவார்கள்.

அப்போது “மடை திறந்து தாவும் நதியலை நான்” னு மனதின் அழுத்தம் அருவியாக கண் வழியே பொழியத் தொடங்கும். பெண்கள் மட்டுமல்ல, அன்று தான் அப்பாக்கள், அண்ணன், தம்பிகள், மாமாக்கள் கூட அழுவதை பார்க்க முடியும் (யார்ப்பா சொன்னது ஆண்கள் அழ மாட்டார்கள் என்று…).

மிகவும் உணர்வுப்பூர்வமான, மனதை நெகிழச் செய்யும் உணர்வுக்குவியலின் நேரமது.

நான் பார்த்த சில பெண்ணழைப்பு சுவாரசியங்கள்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது கடைசி சித்தியின் கல்யாணம். அம்மா ஊர் ஒரு சின்ன கிராமம். எல்லாருக்கும் அனேகமாக எல்லாரையும் தெரியும். அம்மாச்சி வீட்டில் இருந்தே கார் ஏறலாம். ஆனால், பொண்ணு, ஊர்ல எல்லார்கிட்டயும் சொல்லிக்கணும் அப்படின்னு சொல்லி ரெண்டு தெரு நடந்து வந்து கார் ஏற சொன்னாங்க.  எல்லாரும் அவங்கவங்க வீட்ல, வாசல்ல பெண்ணை வழியனுப்ப நின்றார்கள்.

அழுதுகிட்டே கைகூப்பி வணங்கிய வண்ணம் அனைவரையும் பார்த்து தலையசைத்து போயிட்டு வரேன் அப்படின்னு சொல்லிட்டு வந்துச்சு. சித்தி எப்பவுமே, பிள்ளைகள் எல்லாருக்குமே, அன்பான, அனுசரணையான, முக்கியமா எங்களுக்கு இணையாக வம்பும் இழுக்கும் விளையாட்டு தோழியும் கூட. அதனால அது அழறதை பார்த்து ஏன் இது அழுதுகிட்டே வருதுன்னு ஒரு மாதிரி ஆயிடுச்சு. “ஏன் லலி அழற” அப்படின்னு கேட்கிறேன். அது அப்போ என்னை கவனிக்கவே இல்ல.  அப்புறம் கோவில்ல வச்சு கூட திரும்பத் திரும்ப “ஏன் லலி அழுத” னு கேட்டேன்.  அது “எனக்கு அழுகையா வந்துச்சு நான் என்ன பண்ணட்டும்” அப்படின்னு கேட்டுச்சு. நான் பார்த்த முதல் பெண் அழைப்பு அனுபவம் இதுதான்.

இதுல சித்தின்னு எழுதி இருக்கேன். ஆனா ஒரு நாள் கூட அதை சித்தின்னு கூப்பிட்டதே கிடையாது. லலி அப்படின்னு பேர் சொல்லி தான் கூப்பிடுறது. கோவிலில் கூட யாரோ பெரிய தல இனிமே பேர் சொல்லி கூப்பிடக்கூடாது… சித்தின்னு தான் சொல்லணும் அப்படின்னு பீதியை கிளப்பினார்கள். அதுகிட்டயே நான் கேட்டேன் இனிமே உன்னை நாங்க சித்தினு தான் கூப்பிடனுமா னு.  உடனே “இல்லல்ல நீங்க எப்பவும் போலவே கூப்பிடுங்க.. அப்படி கூப்பிட்டா எனக்கே ஒரு மாதிரி இருக்கும்” னு சொல்லிடுச்சு.  என்னைப் பார்த்து என்னோட சித்தி பிள்ளைங்க எல்லாருமே அத பேர் சொல்லி தான் கூப்பிடுவாங்க. ஒருத்தர் கூட சித்தினு இப்போ வரைக்கும் கூப்பிடுறதே கிடையாது. ம்ம்… ஏதோ… குடும்பத்துக்கு நம்மால முடிஞ்ச ஒரு நல்ல காரியம். 

எங்க முதல் சித்தி பொண்ணோட கல்யாணம். வழக்கமான நிகழ்வுகள். தங்கச்சியும் ரொம்ப அழுதுச்சு. அதை பார்த்துட்டு எங்க பெரியம்மா எங்க அண்ணனை கூப்பிட்டு “புள்ள ரொம்ப அழுவுது, ஏதாச்சும் பேசி அதை சிரிக்க வச்சு அனுப்பு” அப்படின்னு சொன்னாங்க. உடனே கூட்டத்தை விலக்கிக்கிட்டு உள்ள வந்து “என்னப்பா, அழுவுறியா? இந்த அப்பாயியை விட்டுட்டு போறோமே ன்னா இவ்ளோ அழற? வேணும்னா உன் கூடவே கூட்டிட்டு போயேன்” அப்படின்னு சொல்லவும் தங்கச்சி பக்குனு சிரிச்சுருச்சு. சுத்தி இருந்த எல்லாருமே தான்.

அப்பாயி உடனே “இவனுக்கு என்னை வம்பு இழுக்கலனா ஆகாது” அப்படின்னு சிரிச்சுகிட்டே ஒரு இடி எங்க அண்ணனை. அப்புறம் எல்லாரும் சந்தோஷமா அனுப்பி வச்சாங்க.

என் தங்கையின் பெண்ணழைப்பு. சாமி கும்பிட கூப்பிட்ட உடனே ஆரம்பித்துவிட்டது. எங்க அப்பாவை பிடிச்சுக்கிட்டு அப்படி ஒரு அழுகை. எங்க அப்பாவும் தான்.

நான், எங்க அக்கா, மாமா பொண்ணுங்க எப்பவும் போல வேடிக்கை பார்த்துட்டு இருந்தோம். (நாங்க, எங்களை அனுப்பும் போதும் அழல… யார அனுப்பும் போதும் அழறது இல்லை… நாங்கல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்பா வகையறா.) இதுல எங்க மாமா பொண்ணு கமெண்ட் வேற, “இந்த அகிலா ஏன் மாமாவை இப்படி அழ வைக்குது” அப்படின்னு. (இத மட்டும் அன்னிக்கு அகிலா கேட்டிருக்கணும்…. ஆனா இப்போ தெரிஞ்சுடுமே… மாட்டுனுச்சு மாமா பொண்ணு.. ம்ம்.. ஏதோ… நம்மால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்.) அப்போ எங்க அண்ணன் பொண்ணுக்கு நாலு வயசு இருக்கும்.. செம சுட்டி.

துருதுரு வாயாடி. பொண்ணு அழறத பாத்துட்டு பக்கத்துல வந்து “அகிலா, நீ அழுவாத நான் உனக்கு கார் வாங்கி தரேன்” அப்படின்னு சொல்லி அந்த சூழ்நிலையை சிரிப்பலையால் நிறைத்து விட்டது. இத நெனச்சு சிரிச்சுட்டே மாப்பிள்ளை வீட்டுக்குப் போனோம். கல்யாணமெல்லாம் முடிஞ்சு மறுவீடு வரும்போது அண்ணன் பொண்ணு கிட்ட “ஆமா… கார் வாங்கி தரேன்னு சொன்னியே. எப்போ தருவ?” அப்படின்னு என் தங்கச்சி கேட்டுச்சு. உடனே அந்த சுட்டி “நீ அழுதுட்டு இருந்தியேனு சொன்னேன்பா. நிஜம் னு நினைச்சுட்டியா?” னு சொல்லி எங்கள் அனைவரையும் வாய் பிளக்க வைத்து விட்டது.

எங்க மாமா பொண்ணுக்கு கல்யாணம். அது ஒரு காதல் கல்யாணம். எங்க குடும்பத்துல முதல் காதல் கல்யாணம். அதனால் அதற்குரிய பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் கல்யாணமும், வரவேற்பும் நடந்து முடிந்ததால், கிளம்பும் போது எல்லார்கிட்டயும் எப்பவும் ஊருக்கு போறப்ப சொல்றது போல சொல்லிட்டு, கையாட்டிட்டு கார் ஏறிட்டாங்க மேடம். இங்க, ஒருத்தங்க, எங்ககிட்ட “பாரு பாப்பா, அழவே இல்ல, அது பாட்டுக்கு போயிடுச்சு” அப்படின்னு. நான் சொன்னேன் “ம்ம்ம்.. என்னை அனுப்பும்போது கூட தான் உங்க அக்கா அண்ணன் ஒருத்தருமே அழலை” அப்படின்னு. அவங்க நம்பவே இல்லை. “போ பாப்பா உன்னை அனுப்பும் போதெல்லாம் அழுது இருப்பாங்க” அப்படின்னு சொல்லி ஒரே சிரிப்பு. (அழுகைலாம் தான் முன்னாடியே நடந்துடுச்சே!!)   

90களின் மத்தியில் தொடங்கி, 30 வருடங்களுக்கும் மேலான அசுரவேக, அதிநவீன       காலமாற்றத்திலும் கூட, இந்த உணர்விலும், நெகிழ்விலும் சிறிதளவும் மாற்றமேயில்லை. இதற்கு, சென்றமாதம் நடந்த அடுத்த தலைமுறை திருமணங்களிலும் (அண்ணன், மாமா மகள்கள்) மாற்றமேயின்றி அரங்கேறிய காட்சிகளே சாட்சி.

வாழ்க திருமண வைபவங்கள்!! வளர்க உறவின் உன்னதங்கள்!!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *