
சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று கொண்டிருந்த போது பைக்கில் ஒரு கும்பல் வந்தது. அந்தக் கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் ஆட்டோ டிரைவர் அருண்மொழியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அருண்மொழியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அருண்மொழி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து காசிமேடு போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் இந்தக் கொலை வழக்கில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் (எ) ரூபன், (32), மாதவரத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(31), கமல்(23) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து 2 அரிவாள்கள், 2 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருண்மொழிக்கும் அவரது உறவினர் விக்னேஷ் (எ) ரூபனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் விக்னேஷ் (எ) ரூபன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அருண்மொழியை கொலை செய்துள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட விக்னேஷ் (எ) ரூபன் மீது 3 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள்.