• July 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோஸி (40) இவர், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை வீட்டுக்குச் செல்ல பெருங்குடி ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ரோஸியின் அருகே இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ரோஸி அமர்ந்திருந்த இருக்கையில் மேடம் இங்கு நான் உட்காரலாமா என மரியாதையாக கேட்டார். அதற்கு ரோஸி, எந்த பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு ரோஸியின் அருகே அமர்ந்த அந்த இளைஞர், அவரிடம் ரயில் குறித்த தகவலை கேட்டார். அற்கும் ரோஸி எந்த பதிலும் சொல்லவில்லை.

சௌந்தர்

இளைஞரின் பேச்சு, நடவடிக்கையில் சந்தேகமடைந்த ரோஸி அங்கிருந்து செல்ல முடிவு செய்தார். அப்போது திடீரென ரோஸி அணிந்திருந்த செயினை பறித்த இளைஞர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். திருடன், திருடன் என ரோஸி சத்தம் போட செயின் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிய இளைஞனை சிலர் விரட்டினர். ஆனால் அவனைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ரோஸி, திருவான்மியூர் ரயில்வே போலீஸாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளைஞரைப் பார்த்த காவலர் ஒருவர், இவனைப் பார்த்தா செயின் பறிப்பு கொள்ளையன் சௌந்தர் மாதிரி இருக்கிறது என்று கூறினார்.

உடனே சௌந்தரின் பின்னணியை விசாரித்ததோடு அவன் தற்போது எங்கு இருக்கிறான் என போலீஸார் விசாரித்தனர். செயின் பறிப்பு சம்பவத்தில் கைதாகி சிறைக்குச் சென்ற சௌந்தர், தற்போது ஜாமீனில் வெளியிலிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சௌந்தரைப் பிடித்து போலீஸார் விசாரித்தபோது ரோஸியிடம் மூன்று சரவன் தங்கச் செயினைப் பறித்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து சௌந்தரை போலீஸார் கைது செய்தனர்.அதோடு அவனிடமிருந்த செயினையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட செயின்

இதுகுறித்து திருவான்மியூர் போலீஸார் கூறுகையில், “செயின் பறிப்பில் ஈடுபட்ட சௌந்தர் மீது ஏற்கெனவே மறைமலைநகரில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த சௌந்தர் மீன்வியாபாரம் செய்து வந்திருக்கிறார். இவரின் மனைவி பிரிந்துச் சென்ற பிறகு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்திருக்கிறார். வருமானத்துக்காக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்களில் சௌந்தர் ஈடுபட்டு வருகிறார். இவர், ரயில் நிலையங்களில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களிடம் பேச்சு கொடுப்பார். அப்போது பெண்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன், செயினைப் பறித்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சௌந்தரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *