
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ‘My TVK’ என்கிற ஆப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு பனையூர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்வில் நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது, “இதுக்கு முன்னாடி தமிழக அரசியலில் நடந்த இரண்டு பெரிய தேர்தல்களான 1967, 1977 போல 2026 தேர்தலும் அமையப் போகிறது. அதை உறுதியாக நம்புகிறோம். அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிகாரத்தில் அசுரபலமாக இருந்தவர்களை எதிர்த்து புதிதாக கட்சி தொடங்கியவர்கள்தான் வென்றிருந்தார்கள்.
எப்படி வென்றார்கள் என்றால் அது சிம்பிள் லாஜிக்தான். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று மக்களை சந்தித்துதான் வென்றிருக்கிறார்கள். ‘மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்!’ என அண்ணா சொன்னதைத்தான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

வீதி வீதியாக வீடு வீடாக சென்று குடும்பம் குடும்பமாக மக்களை வெற்றிப் பேரணியில் தமிழ்நாட்டில் இணையுங்கள். அடுத்ததாக மதுரையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என நிறைய இருக்கிறது. மக்களோடு மக்களாகத்தான் இருக்கப்போறோம். நாம இருக்குறோம். நம்ம கூட மக்கள் இருக்குறோம். நல்லதே வெல்லும். நல்லதே நடக்கும்” என்றார்.