• July 30, 2025
  • NewsEditor
  • 0

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஸ்டெர்லைட், காவல் நிலைய மரணம், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடியவர். மதுரை காமராசர் பல்கலைக்கழக முறைகேடு, அனைத்து சாதியினருக்கு அர்ச்சகர் பணி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல வழக்குகளை நடத்தியவர்.

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்

இவர், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு சார்பாக செயல்படுகிறார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு புகார் அனுப்பியதாகவும், அந்த புகாரின் விவரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதாகவும் சர்ச்சை ஏற்பட்டது.

இதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்- ராஜசேகர் அமர்வு, கடந்த 25 ஆம் தேதி வழக்கறிஞர் வாஞ்சிநாதனை விசாரணை செய்தனர். மீண்டும் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கவேண்டும் என்று விசாரணையை 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்த, வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக அரி பரந்தாமன் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆலோசனை நடத்தி ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

வாஞ்சிநாதன்

அதேபோல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகவும் வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்பினரும் கருத்துகளை தெரிவிக்க, நீதித்துறை மற்றும அரசியல் தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் உயர் நீதிமன்றக்கிளையில் கடந்த 28 ஆம் தேதி வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

சமூக வலைதளம் ஒன்றில் ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து வாஞ்சிநாதன் பேசிய வீடியோ ஒன்றை காண்பித்த நீதிபதிகள், அதன் தலைப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர். ‘இந்த வழக்கிற்கு இது தொடர்பில்லாதது, வீடியோவை பார்த்து முடிவெடுக்க முடியாது. வீடியோவிலுள்ள தலைப்புக்கு நான் பொறுப்பல்ல’ என்றார் வாஞ்சிநாதன்.

“வீடியோவில் பேசிய கருத்து குறித்துதான் கேள்வி எழுப்பினோம். தீர்ப்பு குறித்து விமர்சிப்பதற்கு உங்களுக்கு 100 சதவிகித உரிமை உள்ளது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சாதி ரீதியாக செயல்படுகிறார் என நீங்கள் பேசியது உண்மையா? அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா?” என்ற நீதிபதிகளிடம், “எப்போது எங்கு பேசினேன், என்பதற்கு எழுத்துப் பூர்வமாக கேட்டால் பதில் அளிக்கிறேன். வீடியோக்கள் வெட்டி ஓட்டப்பட்டிருக்கலாம். தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த இந்த வழக்கை தாங்கள் விசாரிப்பது ஏற்புடையது அல்ல” என்றார் வாஞ்சிநாதன்

 

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ” இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அரிபரந்தாமன் ஊடகங்களில் பேசினார். மற்றொரு முன்னாள் நீதிபதி சந்துரு இந்த அமர்வை கேள்விக்குட்படுத்தி ஓய்வுபெற்ற இன்னும் சில நீதிபதிகள் சார்பாக அறிக்கை வெளியிட்டார். அதில் ஒரு முன்னாள் நீதிபதி இந்த அறிக்கையை வெளியிட நான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதை தெளிவுபடுத்த வேண்டியது நீதிபதி சந்துருவின் பொறுப்பு,
அடிப்படை உண்மை இல்லாத அனுமானங்கள் செய்யப்பட்டுள்ளதை நீதித்துறை செயல்பாட்டில் இதுபோன்ற தலையீட்டை எப்படி செய்யலாம் என்ற அதிருப்தியை நாங்கள் பதிவு செய்ய வேண்டும்.

வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து கடந்த 24 ஆம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடவில்லை. தற்போதைய நடவடிக்கைக்கும் அந்த புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். நீதித்துறை செயல்பாட்டை உள் நோக்கத்தோடு சமூக ஊடகங்களில் வாஞ்சிநாதன் தொடர்ந்து பேசி வருவதால்தான் நாங்கள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டோம்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

நாங்கள் இதுவரை வாஞ்சிநாதனுக்கு எதிராக எந்த அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜி.ஆர் சுவாமிநாதன் சாதி சார்பாகவும் மத சார்பாகவும் செயல்படுகிறார் என்று வாஞ்சிநாதன் தொடர்ந்து யூ டியூப் வீடியோக்களில் பேசி வருகிறார். அதனால்தான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  அவர் மீதான நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதற்கு முன்பாக வாஞ்சிநாதன் மனதை மாற்றிக்கொண்டால் இவ்வழக்கை முடித்து வைப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால், அவருக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. எந்த நிலைபாட்டையும் எடுக்க முன்வரவில்லை.

சமூக செயற்பாட்டாளர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். ஆனால், அவர் தைரியமில்லாமல் இருக்கிறார். ஒரு நீதிபதி எடுத்த உறுதிமொழி அடிப்படையில் தன் மனசாட்சிக்கு உட்பட்டு நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுகிறார். சாதி மத அடையாளத்தை சுமப்பவராக கருத முடியாது. சமூக ஊடக விவாதத்தை ஒழுங்கு படுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏற்கனவே வாஞ்சிநாதன் பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது திரும்பப் பெற்ற பிறகும் அவர் தன் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து நீதித்துறையை அவதூறு செய்து வருகிறார்.

நீதிமன்ற தீர்ப்புகளை எந்தவொரு குடிமகனும் விமர்சிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், நீதிபதியை குறை கூறவோ அவரின் நல்லெண்ணத்தை, திறனை கேள்விக்குள்ளாக்கவோ உரிமை இல்லை. இதை கண்டுகொள்ளாமல் இருந்தால் நீதி வழங்கும் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பர் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே வாஞ்சிநாதன் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *