
பெங்களூருவில் முதியவர் ஒருவரை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள கொடிகேகல்லி என்ற இடத்தில் வசித்தவர் சீத்தப்பா (70). இவர் இரவில் சரியாக உறக்கம் வராமல் திணறிக்கொண்டிருந்தார்.
இதனால் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சிக்குச் சென்று வரலாம் என்று நினைத்து சீத்தப்பா தனது வீட்டை விட்டு வெளியில் வந்தார். அவரது வீட்டிற்கு வெளியில் தெருநாய்கள் அதிக அளவில் நின்று கொண்டிருந்தன.
அவர் வெளியில் வந்த நேரத்தில் இருட்டு அதிகமாக இருந்தது. சீத்தப்பா வந்தவுடன் தெரு நாய்கள் அவரைச் சுற்றி வளைத்துத் தாக்க ஆரம்பித்தன. இதனால் உதவி கேட்டு சீத்தப்பா கத்தினார். வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.
வெளியில் தெரு நாய்கள் சீத்தப்பாவைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தன. அவற்றை அடித்து விரட்டிவிட்டு சீத்தப்பாவை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சீத்தப்பாவின் உடம்பில் நாய்க் கடிகளால் கைகள், கால்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது, சதைப் பகுதிகள் கிழிந்தன. இதனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற்னார். சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்து என்ன நடந்தது என்பதை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் சுற்றித்திருந்த 15 தெரு நாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். கடந்த வாரம்தான் கர்நாடகாவின் ஹூப்லியில் 3 வயது சிறுமியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறியது.

இதில் சிறுமி படுகாயம் அடைந்தார். பெங்களூருவில் தெரு நாய்களுக்கு சிக்கன் சாப்பாடு வழங்கும் திட்டத்தை மாநகராட்சி அறிவித்து இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும் 4 முதல் 5 ஆயிரம் தெரு நாய்களுக்குச் சமைத்த சிக்கன் சாப்பாடு வழங்கப்படும். இது கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.