
மேகாலயாவில் உள்ள டியன்கன் மற்றும் ராஜாஜு ஆகிய கிராமங்களில் இருந்த நிலக்கரி குடோனில் 4,000 டன் நிலக்கரியை சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலக்கரி சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். அதனை மாநில அரசு பறிமுதல் செய்து குடோனில் வைத்திருந்தது. ஆனால் அந்த நிலக்கரி இப்போது திடீரென காணாமல் போய் விட்டது. அதை யாராவது திருடிச்சென்றார்களா என்று தெரியவில்லை. அந்த நிலக்கரி திருட்டு போனது தொடர்பாக மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலக்கரி காணாமல் போனது குறித்து மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்தது.
மழை வெள்ளத்தில் நிலக்கரி…
இரு கிராமங்களில் இருந்த நிலக்கரியை யாரோ திருடிச்சென்று இருக்கிறார்கள் என்றும், திருடியவர்களை அடையாளம் காணும் படியும், நிலக்கரியை பாதுகாக்க நியமிக்கப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கைர்மென் ஷில்லாவிடம் கேட்டதற்கு,”மேகாலயாவில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இது அனைவருக்கும் தெரியும். எனவே மழை வெள்ளத்தில் நிலக்கரி அடித்து செல்லப்பட்டு இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த நிலக்கரி அண்டை மாநிலமான அஸ்ஸாம் அல்லது பங்களாதேஷ் அடித்துச்செல்லப்பட்டு இருக்கலாம்.
மழையை குற்றம் சாட்ட முடியாது
நிலக்கரி காணாமல் போனதை நியாயப்படுத்தவில்லை. நிலக்கரி மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதா அல்லது திருட்டு போனதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. என்னால் மழையை குற்றம் சாட்ட முடியாது. நிலக்கரியை மழை வெள்ளம் அடித்து சென்று இருக்கலாம் அல்லது அடித்துச்செல்லாமல் இருக்கலாம். அது பற்றிய தகவல் இல்லை. ஆனால் சட்டவிரோதமாக நிலக்கரியை எடுத்துச்செல்லவோ அல்லது சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தையோ அனுமதிக்க முடியாது” என்றார்.

அமைச்சர் கைர்மென் 4000 டன் நிலக்கரியை அண்டை நாடு மற்றும் அண்டை மாநிலத்திற்கு அடித்து செல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக குடோனில் இருந்த நிலக்கரியை ஆய்வு செய்து இருப்பை அரசு உறுதி செய்திருந்தது. 2014ம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு தடை விதித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் முதல் முதல் சுரங்கம் செயல்படத்தொடங்கி இருக்கிறது. கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதி நிலக்கரி அதிகமுள்ள பகுதியாகும். அமைச்சர் கைர்மென் அப்பகுதியில் இருந்துதான் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.