மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகை தந்த பிரதமருக்கு, ஓ.பி.எஸ் வரவேற்பு அளிக்க விரும்பி கடிதம் எழுதியிருந்தார்.
“தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கிடைத்தால், அது எனக்கு பெருமையாக இருக்கும்,” என்று அவர் கோரியிருந்தார். ஆனால் இப்படி வெளிப்படையான கோரிக்கை வைத்தபோதும் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர். இது ஓ.பி.எஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திப்பு மறுக்கப்பட்ட பின்னணி
ஓ.பி.எஸ்-க்கு சந்திப்பு மறுக்கப்பட்டதற்கு, ‘அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற பா.ஜ.க-வின் உறுதியான நிலைப்பாடே காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். மேலும் அவர்கள், “அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உருவாகும்போதே, ஓ.பி.எஸ் மற்றும் டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கடுமையாக வலியுறுத்தியிருந்தார். அ.தி.மு.க-வுடனான கூட்டணி பா.ஜ.க-வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் பதவியை மீண்டும் அண்ணாமலைக்கு வழங்காததில் இருந்தே புரிந்துக்கொள்ள முடியும்,” என்கின்றனர். இதனால்தான் முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோதும் ஓ.பி.எஸ்-க்கு சந்திப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
ஓ.பி.எஸ் தரப்பின் ஆதங்கம்
அதேநேரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வை அவமரியாதையாகக் கருதுகின்றனர். “தமிழக அரசியலில் நீண்ட வரலாறு கொண்டவர் ஓ.பி.எஸ். முன்னாள் முதலமைச்சரான அவரைப் புறக்கணிப்பது ஏற்கத்தக்கதல்ல. தே.ஜ. கூட்டணியில் இருக்கும் அவர், பிரதமரைச் சந்திக்க விரும்புவது இயல்பு. ஆனால், திட்டமிட்டு அவரை மட்டும் புறக்கணித்திருப்பது அரசியல் நாகரிகமற்ற செயல்,” என்கிறார்கள் ஓ.பி.எஸ்-ன் நெருங்கிய ஆதரவாளர்கள்.
மேலும், “எடப்பாடி, ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோரைச் சந்தித்துவிட்டு, ஓ.பி.எஸ்-ஐ மட்டும் தவிர்ப்பது, அவரை தே.ஜ-வுக்கு தேவையில்லை என்பதை உணர்த்துகிறது. இனி இந்தக் கூட்டணியில் தொடர வேண்டிய அவசியம் என்ன?” என அவர் கேள்வி எழுப்புகிறார்கள்.

த.வெ.க-வுடன் இணைவாரா ஓ.பி.எஸ்?
இந்தச் சூழலில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், “தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க) ஓ.பி.எஸ் இணைந்தால், தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற முடியும்,” என்று தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து ஓ.பி.எஸ்-ன் தேர்தல் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான ஏ. சுப்புரத்தினதிடம் பேசினோம், “பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து ஓ.பி.எஸ்-யை புறக்கணிக்கின்றனர். 2024 தேர்தலில் கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடிக்கு சிவப்புக்கம்பள மரியாதை அளிக்கப்படுகிறது. ஆனால், விசுவாசமாக இருந்த ஓ.பி.எஸ்-க்கு அவமரியாதை செய்யப்படுகிறது. இனி தே.ஜ-வில் தொடர்வது குறித்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் கேள்வி எழுப்புகின்றனர்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “த.வெ.க-வில் அனுபவமிக்க தலைவர் இல்லை. ஓ.பி.எஸ்-ன் அரசியல் நாணயமும், பொறுமையும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். சீமான் உள்ளிட்ட சில தலைவர்களும், சிறுபான்மை இயக்கங்களும் ஓ.பி.எஸ்-யை அனுசரித்து வருகின்றனர். எனவே கூட்டணியிலிருந்து வெளியேறினால், பல அரசியல் சக்திகளிடமிருந்து அழைப்பு வரும்,” என்றார்.
ஓ.பி.எஸ்-ன் அடுத்தகட்ட நகர்வு
இந்தச் சூழலில், ஓ.பி.எஸ், “2024-2025-ம் ஆண்டிற்கான சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கு ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் என தெரிவித்திருக்கிறார். இது, அவரது அரசியல் முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநாட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதனால் தே.ஜ-வுடனான அவரது உறவு தொடருமா, அல்லது த.வெ.க உள்ளிட்ட பிற கட்சிகளுடன் இணைவாரா என்பது ஓ.பி.எஸ்-ன் அடுத்த நகர்வைப் பொறுத்து விரைவில் தெரிந்துவிடும்.
எப்படியோ மோடியை கண்டித்து ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தாமல் இருந்தால் சரி!