• July 30, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால் கற்பூரத்தைத் தடவுவது என்பது காலங்காலமாக  வழக்கத்தில் உள்ளதுதானே… இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ்.

எஸ். ஸ்ரீநிவாஸ்

இராசயனம் கலந்த கற்பூரம் என்பது வீடுகளில் பொதுவாக பூஜை அறைகளில் பயன்படுத்தப்படுகிற பொருள்.  ஆனால், அது இருமல், சளிக்காக கடைகளில்  விற்கப்படும் தைலங்களிலும், களிம்புகளிலும் சேர்க்கப்படுவதையும் பார்க்கலாம்.

இராசயன கற்பூரம் என்பது, டர்பன்டை ஆயில் (Turpentine oil) தயாரிப்பில் தொழிற்சாலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள். புனிதமானதும் மருத்துவ குணமுள்ளதுமாகப் பார்க்கப்படுகிற கற்பூரம், உண்மையில் சுவாச மண்டலத்தையும், நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது.  அதன் விளைவாக வலிப்பு, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தி, சரியான சிகிச்சை கிடைக்காதபட்சத்தில்,  உயிரிழப்புவரை ஏற்படுத்தும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டது, ஆபத்தானது.  குறிப்பாக, குழந்தைகளுக்கு இது மிக மோசமான பாதிப்புகளையும் மரணத்தையும்கூட ஏற்படுத்தலாம். 

இராசயன கற்பூரம் எளிதில் கிடைக்கும் பொருளாக உள்ளதாலும், இதன் வாசம் பிடிக்கும் என்பதாலும் குழந்தைகள் இதை உட்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. தவிர, பூஜைக்குப் பயன்படுத்தும்போது கவனமாக இல்லாவிட்டால், தேங்காய், பிரசாதம் உள்ளிட்ட உணவுப்பொருள்களுடன் கலந்துவிடும் அபாயமும் இருக்கிறது. கற்பூரத்தை  நேரடியாகவோ, அது கலந்த உணவுப்பொருள்களையோ உட்கொள்ளும்போது, உடனடியாக ரத்தத்தில் கலந்து அதன் தாக்கம்  மூளையைச் சென்றடையும். மூளையில் இது ஏற்படுத்தும் பாதிப்பால், சில நிமிடங்களில் வலிப்பு ஏற்படலாம். உடனடியாக சிகிச்சை கொடுக்கத் தவறினால்,  சுவாசத்தை நிறுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

கற்பூரம் கலந்த தைலம், களிம்புகளை சருமத்தில் தடவும்போது அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

இராசயன கற்பூரத்தை உட்கொள்ளும்போது மட்டுமன்றி, நுகரும்போதும்  சுவாசப்பாதை வழியேவும், சருமத்தில் பட்டால் ரத்தத்தில் கலந்தும் மூளைக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கற்பூரம் கலந்த தைலம், களிம்புகளை சருமத்தில் தடவும்போது அலர்ஜி, கொப்புளங்கள், புண்கள் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. அதிக அளவிலான பயன்பாடு பேராபத்தை ஏற்படுத்தலாம். வேபரப் களிம்புகளை குழந்தைகளுக்குப் பயன்படுத்தும்போது, புரையேறி, மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருக்கிறது. 

எனவே, குழந்தைகள் உள்ள வீடுகளில் கற்பூரத்தைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அது அவர்களது கைகளுக்கு எட்டாத இடத்தில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கற்பூரத்தை நேரடியாகவோ, அது கலந்த மருந்துகளையோ குழந்தைகளுக்கு எக்காரணம் கொண்டும் பயன்படுத்தவே கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *