
வயநாடு நிலச்சரிவு எனும் கேரள மாநிலத்தில் வரலாறு கண்டிராத பேரழிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டை எட்டியிருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இறுதி வாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை ஒருகட்டத்தில் மேக வெடிப்பாக மாறியது. முண்டைகை ஆறு உற்பத்தியாகும் புஞ்சிரி மட்டம் மலை உச்சியில் ஜூலை 29 – ம் தேதி இரவு விண்ணைப் பிளந்துக் கொட்டிய மழை அந்த பேரழிவுக்கு வித்திட்டது. அதீதமான மழைப்பொழிவால் தாங்கு திறனை இழந்த மலை உச்சியில் இருந்து சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டு, அவை ஓரிடத்தில் ஒன்றாகத் தேங்கி அணைக்கட்டு உடைப்பைப் போன்று 2 அல்லது 3 முறை ஏற்பட்டு பேரழிவுக்கு வித்திட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயற்கை எழில் கொஞ்சும் முண்டகை ஆற்றின் இரு மருங்கிலும் நிம்மதியாக வாழ்ந்து வந்த மக்கள், கடந்த ஆண்டு ஜூலை 29- ம் தேதி இரவு பெய்த பேய் மழையைக் கண்டு அச்சத்துடனேயே உறங்கச் சென்றிருக்கிறார்கள். எதிர்பார்த்ததைப் போலவே 30- தேதி அதிகாலை புஞ்சிரி மட்டத்தில் தொடங்கிய நிலச்சரிவு, முண்டகை ஆற்றின் போக்கையே மொத்தமாக மாறி கிராமங்களுக்குள் பெருக்கெடுத்திருக்கிறது. கற்பனைக்கும் எட்டாத அளவிளான ராட்சத பாறைகளும், காட்டு மரங்களும் வெள்ள நீருடன் அடித்து வரப்பட்டதில் பல கிலோமீட்டருக்கு கிராமங்கள் இருந்த தடயமே இல்லாமல் போனது. குடியிருப்புகள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை அத்தனையும் தரைமட்டமானது. கண்களுக்கு எட்டும் தூரம் வரை மரண ஓலங்களையும் இடிபாடுகளையும் மட்டுமே காண முடிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் மண்ணோடு மண்ணாகக் கலந்தனர். பல கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் அடித்துச் செல்லப்பட்ட மனித உடல் பாகங்கள் காண்போரை குலை நடுங்கச் செய்தன. இந்த பேரழிவில் சிக்கி 400 – க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் பலரைக் காணவில்லை எனவும் கேரள அரசு அறிவித்திருந்தது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, அண்டை மாநிலங்களின் அரவணைப்பு, தன்னார்வலர்களின் தொண்டுள்ளம் என ஒட்டுமொத்த மக்களும் வயநாட்டிற்கு ஆதரவாக நின்று களத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

மாதக்கணக்கில் நடைபெற்ற மீட்பு பணிகளில் கிடைக்கப்பெற்ற உடல் பாகங்கள் மனித உடல் பாகங்கள் சோகத்தை கூட்டியது. புஞ்சிரி மட்டத்தில் தொடங்கி சூரல் மலை வரை ஆய்வு மேற்கொண்ட புவியியல் துறையினர், அந்த பகுதிகளை மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதிகளாக அறிவித்தனர். கண்ணெதிரே நடந்த இந்த பிரளயத்தில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து மரணத்தின் விளிம்பில் இருந்து உயிர் தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள் அரசின் தற்காலிக குடியிருப்புகளில் இன்றளவும் நடைபிணமாகவே வாழ்ந்து வருகிறார்கள். வயநாடு முழுவதும் சிதறடிக்கபட்டிருக்கும் இந்த மக்களின் மறுவாழ்வுக்கான தேவை என்ன என்பதை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாமல் இன்றளவும் அரசுத்துறைகள் திணறி வருகின்றன. ஒவ்வொரு நாள் இரவு தூக்கத்திலும் திடுக்கிட்டு விழித்தெழும் இந்த மக்கள், ஓராண்டல்ல நூறாண்டைக் கடந்தாலும் ஆறாத ரணமாகவே இருக்கும் என கதறி துடிக்கிறார்கள்.