
இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், அந்த மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில், அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கியதாகத் தெரிவித்திருக்கிறது. இதற்கு பீகார் மாநில எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். 7.89 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், இன்னும் இந்த வாக்காள திருத்தப் பணி முடியவில்லை என்பதால் இன்னும் வாக்காளர் பெயர் நீக்கம் தொடரும் எனவும் கூறப்படுகிறது. இதை எதிர்த்து பீகார் மாநில எதிர்க்கட்சிகள், “நேர்மையாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறாது என்பது கொஞ்சம் கொஞ்சமாக புலப்படுகிறது. தேவையென்றால் தேர்தலையும் புறக்கணிப்போம்” எனக் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ.க அரசின் என்.ஆர்.சி-யை தேர்தல் ஆணையம் மூலம் செயல்படுத்துகிறது எனக் காட்டமாக விமர்சிக்கின்றன. இதற்கிடையில், இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பின் பிரிவுகள் 14, 19, 21, 325 மற்றும் 326 ஐ மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960-ன் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறையிலிருந்து விலகுவதாகவும் உள்ளது. இந்த செயல்பாட்டின் மூலம் சுமார் 65 லட்சம் பேர் விலக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருக்கிறது. 65 லட்சம் பேரில், பெரும்பான்மையானவர்கள் இறந்துவிட்டதாக கூறுகிறது.” என்றார்.
தேர்தல் ஆணையம், “அரசியலமைப்பின் பிரிவு 324 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 21(3)-ன் கீழ் வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.
இடம்பெயர்வு, மக்கள்தொகை மாற்றங்கள், ஏற்கெனவே உள்ள பட்டியல்களின் துல்லியம் குறித்தும் நீண்டகாலமாக கவலைகள் இருக்கின்றன. எனவே, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தீவிரமாக திருத்தப்படாத வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்வது அவசியம்.
ஆதார், ரேஷன் கார்டுகளை மோசடி அல்லது பொய்யான ஆவணங்கள் மூலம் பெறலாம் என்பதால் அவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டவுடன், யார் விலக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த சரியான இறுதித் தகவல் வரும். குறைந்தபட்சம் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் இறுதிப் பட்டியலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆவணங்களின் பட்டியலில் ஆதாரைச் சேர்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறோம். முக்கியமாக, தேர்தல் ஆணையம் விதிமுறைகளிலிருந்து ஏதேனும் விலகினால், SIR செயல்பாட்டில் நாங்கள் தலையிடுவோம். இரு தரப்பினரும் பரிந்துரைத்த காலக்கெடுவைக் கருத்தில் கொண்டும், பரிசீலனைக்கு வரும் பிரச்னைகளின் அவசரம், தன்மையைக் கருத்தில் கொண்டும், இந்த விஷயங்களை ஆகஸ்ட் 12-13-ம் தேதிகளில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.
அப்போது இதன் இறுதிப் பட்டியல் குறித்த இரு தரப்பின் வாதங்களையும் கேட்கலாம். இரண்டாவது கட்டத்தை செப்டம்பரில் விசாரிப்போம். இந்த வழக்கில் ஒரு நோடல் (இரு தரப்பிற்கும் பொதுவாக இருந்து ஆவணங்களை திரட்டி நீதிமன்றத்திடம் ஒப்படைக்கும்) வழக்கறிஞரை நியமிக்கிறோம். அவர் ஆகஸ்ட் 8-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் முழுமையான வழக்குகளின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.” என உத்தரவிட்டிருக்கிறது.