
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு ஊராட்சி சேர்ந்த புலிக்குத்தி காடு கிராமம் அருகே ஒரு தனியார் தோட்டத்தில் 3 பளியர் பழங்குடி குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டு தங்கி இருந்துள்ளனர்.
இதற்காக கூலியாக பெண்களுக்கு 100 ரூபாயும் ஆண்களுக்கு 300 ரூபாயும் அந்த தோட்டத்தினர் கொடுத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் வன உரிமை அங்கீகாரச் சட்டம் -2006 குறித்து தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இந்த பழங்குடி மக்கள் கலந்துகொண்டு தாங்கள் தனியார் தோட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்வது பற்றியும், ஆதார் அட்டை ரேஷன் அட்டை வாக்காளர் அடையாள அட்டை போன்றவை எதுவுமே தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி தனியார் தோட்டத்து உரிமையாளருக்கு தெரிய வரவே மூன்று குடும்பத்தினரையும் தோட்டத்திலிருந்து விரட்டியதாக கூறுகின்றனர்.
புலிகுத்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், ஆதரவற்ற நிலையில் இருந்த இந்த குடும்பங்களை புலிக்குத்தி காடு விநாயகர் கோவில் அருகே கடந்த 50 நாள்களாக தங்க வைத்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து வருவாய் துறை அலுவலர்கள் விசாரணை செய்து மூன்று குடும்பங்களுக்கும் இடம் மற்றும் அரசின் குடியுரிமை சான்றிதழ்கள் வழங்குவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இது பற்றி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பத்தினரும் நேரடியாக புகார் அளித்ததின் பேரில் பயிற்சி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு மூலமாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்துள்ளனர்.