
கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ கார் அர்ஜெண்டினாவில் ஒருவரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததால், அந்த நபருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தில், அர்ஜெண்டினாவின் சிறிய கிராமத்த்தில் அந்த நபர் வீட்டின் பின்புறம் 6 அடி உயர சுவருக்கு உள்ளே நின்று குளித்துக்கொண்டிருப்பது தெரிந்துள்ளது. ஆனால் அந்த புகைப்படத்தால் தனது கண்ணியம் கெட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியான அந்த நபர், கூகுள் (Google) நிறுவனத்தின் இந்த செயலால் தான் பணியிடத்திலும் பக்கத்துவீட்டுக்காரர்களாலும் ஏளனப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அந்த நபரின் முதுகுப்புறம் அப்பட்டமாகத் தெரியும் புகைப்படம் இணையத்தில் பரவியிருக்கிறது. கூகுள் அவரது வீட்டு எண்ணையும், தெருவின் பெயரையும் கூட மறைக்கவில்லை என குற்றச்சாட்டில் கூறியுள்ளார்.
2017ல் எடுக்கப்பட்ட இந்த படத்துக்காக 2019ல் கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்தார். கீழமை நீதிமன்றம், வீட்டுக்கு வெளியில் நிர்வாணமாக நின்றதற்காக அந்த நபரையே குறை கூறி, மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் தான் மேல் முறையீட்டில் அந்த நபருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. கூகுள் நிறுவனம் சார்பாக, அந்த வீட்டின் சுற்றுச் சுவர் போதுமான உயரத்தில் இல்லை என வாதாடப்பட்டாலும், அந்த நபர் வீட்டின் எல்லைக்குள் இருக்கும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது தனியுரிமை மீதான தாக்குதல் என நீதிமன்றம் கூறியுள்ளது.
“யாரும் தாங்கள் பிறந்தமேனியாக உலகுக்குக் காட்டப்படுவதை விரும்ப மாட்டார்கள்.” எனக் கூறிய நீதிமன்றம் அந்த நபருக்கு $12,500, அதாவது சுமார் 10.8 லட்சம் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
உடனடியாக யாரும் தங்கள் ஸ்ட்ரீட் வீயூவை சோதிக்க வேண்டாம். கூகுள் நிறுவனம் அதன் ஸ்ட்ரீட் வியூவில் நம்பர் பிளேட்டுகள் மற்றும் முகங்கள் தென்பட்டால் தானாகவே ப்ளர் ஆகிவிடும் படி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறது. ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட எதையாவது மறைக்க விரும்பினால், புகார் அளிக்கும் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.