
“நம்மை யார் ஆள வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யலாம்” என்பதுதான் ஜனநாயகத்தின் உச்ச அடையாளம் என்றால் அது மிகையாகாது. ‘தேர்தல்’ என்ற அந்த ஜனநாயக நடைமுறைக்கென சில வரைமுறைகள் உள்ளன. தேசத்துக்கு தேசம் அது மாறுபடும். தேர்தல் அரசியலும் அப்படித்தான். ஆனால், இப்போது உலகம் முழுவதும் தேர்தல் அரசியலில் ஓர் ஒற்றுமை நிலவுகிறது. அது தேர்தலில் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடும், அதன் தாக்கமும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசியல் களத்தில் ஏஐ என்னவெல்லாம் செய்கிறது என்பதை சாதக, பாதகங்கள் தொனியில் பார்க்கலாம்.
பரிணாம வளர்ச்சி கண்ட பிரச்சார உத்திகள்! – தேர்தல் வந்துவிட்டாலே ‘வாக்காளர் பெருமக்களுக்கு’ மவுசு அதிகமாகிவிடும். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலளிக்காத பிரதிநிதி கூட கந்தசாமிக்கும், கருப்பசாமிக்கும் நின்று நிதானமாக பதிலளித்துவிட்டு, தேவைப்பட்டால் மன்னிப்பு கூட கேட்டுவிட்டு வாக்கு கேட்பார்.