
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மகன் கவின் குமார் (26). இவர், சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கவின் குமார், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர், அஷ்டலெட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.
இந்தப் படுகொலைக்குப் பிறகான விசாரணையில், கேடிசி நகரைச் சேர்ந்த சரவணன், இவரது மனைவி கிருஷ்ணகுமாரி ஆகியோர் மணிமுத்தாறு ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணிபுரிகின்றனர்.
இவர்களது மகன்தான் சுர்ஜித். ஒரு மகளும் இவர்களுக்கு உள்ளார். சரவணனின் மகளும், கவினும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் காதலுக்கு சரவணன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் சுர்ஜித், கவின் குமாரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சுர்ஜித்தை போலீஸார் கைது செய்து, அவர் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் கொலை தொடர்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன், “பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்.”