
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசனை விமர்சித்து திமுக கவுன்சிலர் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் 200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்கள். 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். வரி மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சியான அதிமுக வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதைப்போலவே சிபிஎம் மாநரச் செயலாளரும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். அதன் காரணமாக தற்போது மதுரை சரக டிஐஜி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. அது மட்டுமின்றி, மத்திய அரசு வெளியிட்ட தூய்மையான நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு கடைசி இடம் கிடைத்தது. இது குறித்தும், மாநகாராட்சி நிர்வாகத்திலுள்ள பல்வேறு குறைகளை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன், ‘வரலாற்று சிறப்பு மிக்க மதுரை நகரத்தின் தூய்மையை பேணி காக்க தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று மதுரை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தல் தீர்மானம் வாசிப்பதற்கு முன்பாக அதிமுக கவுன்சிலர்கள், ‘மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், விவாதம் நடத்த வேண்டும்’ என மேயரின் இருக்கை முன்பாக முழக்கமிட்டபடி மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினா்.
இதனையடுத்து முதல் தீர்மானமாக வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தீர்மானம் இடம்பெற்றிருந்தது.
அப்போது ‘இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது, எதற்காக இந்த தீர்மானத்தை மாமன்றக் கூட்டத்தில் வைத்தீர்கள்?’ என மாநகராட்சி ஆணையாளரை பார்த்து திமுக கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

‘ராஜினாமா ஏற்பு குறித்த தகவலுக்காக மாமன்ற கூட்டத் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது, இது தொடர்பாக கூட்டத்தை நடத்தக்கூடிய அதிகாரியிடம் உரிய விளக்கம் கேட்கப்படும்’ என்று மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் தெரிவித்தார்
இதனையடுத்து திமுக கவுன்சிலர் ஜெயராமன் பேசும்போது, “மதுரை மாநகராட்சியை குப்பை நகரமாக மத்திய அரசு அறிவித்த நிலையில் அது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது வேதனைக்குரியது, இனி இதுபோன்று மாநகராட்சி குறித்து இழிவாகப் பேசுவதை கைவிட வேண்டும். திமுக-வினர் ரத்தம் சிந்தி தெருத்தெருவாக உழைத்ததால்தான் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றிருக்கிறீர்கள். ஆனால், இப்போது மாநகராட்சி குறித்து இழிவாக பேசுகிறீர்கள். வேண்டுமென்றால் பொதுவெளியில் பேசுவதை விட்டு மாமன்ற கூட்டத்தில் வந்து பேசுங்கள். மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் கூட்டத்திற்கு வருகிறார்கள், ஆனால் 6 ஆண்டுகள் ஆகியும் நீங்கள் ஏன் மாமன்ற கூட்டத்திற்கு வரவில்லை? . தமிழக அரசின் பணத்தில் தான் மதுரை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது, மத்திய அரசிடமிருந்து நீங்கள் நிதி வாங்கிக் கொடுக்கலாமே” என்றார்.

துணை மேயர் நாகராஜன், ” `நாடாளுமன்ற உறுப்பினர் பேசியது குறித்து தவறாக திரித்து சொல்கிறீர்கள், முதலமைச்சர் மதுரை மாநகராட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றுதான் பேசினார்’ என பதில் அளித்தபோது மீண்டும் பேசிய ஜெயராமன், “வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்லக் கூட வராத நாடாளுமன்ற உறுப்பினர், எப்படி குப்பை நகரம் என சொல்லலாம்” என்றார்.
அப்போது பேசிய மேயர் இந்திராணி, “தமிழகத்தை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிகளை தூய்மை நகரப் பட்டியிலில் குறைத்து காட்டியுள்ளனர், குப்பை நகரம் என்ற மத்திய அரசின் ஆய்வின் முடிவை மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாது” என்றார்.
இப்படி தொடர்ந்து கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதித்ததால் மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.