
புதுடெல்லி: பிரளய் ஏவுகணை இரண்டு முறை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ நேற்றும் இன்றும் (ஜூலை 28, 29) ஒடிசா கடல்பகுதியில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து பிரளய் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஏவுகணை அமைப்பின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சரிபார்க்க இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏவுகணைகள் சரியான பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாகத் தாக்கின. அனைத்து துணை அமைப்புகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்பட்டன.