
திருவாரூர் மாவட்டம், பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆதம் வயது 23. இவர் தென்காசி, பறையபட்டி பகுதியில் வசித்து வருகிறார். திருவாரூர் புலிவலம், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் வயது 22. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் ஆதமுடன் போனில் பேசுவதை தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திருவாரூக்கு வந்த ஆதம் தனது நண்பர்கள் பாண்டுகுடியை சேர்ந்த முகமது ராகுல்தீன் மற்றும் தென்காசியை சேர்ந்த ஹாஜ் முகமது ஆகியோரை அழைத்து கொண்டு நேற்று நள்ளிரவு காதலியான இளம் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது இளம் பெண்ணை பார்த்து என்னிடம் ஏன் பேசுவதில்லை என கேட்டுள்ளார் ஆதம். மேலும் மூன்று பேரும் அந்த பெண் வீட்டில் தகராறு செய்துள்ளனர்.
அப்போது, நான் உங்க மகளை காதலிக்கும் போது வாங்கி கொடுத்த பொருட்களையும் செலவு செய்த பணத்தையும் திருப்பிக் கொடுங்கள் என இளம் பெண்ணின் அம்மாவிடம் ஆதம் கேட்டுள்ளார். இதையடுத்து பெண்ணின் அண்ணன் கோபி கிருஷ்ணன் ஆதமையும், அவரது நண்பரகளையும் அங்கிருந்து போக சொல்லியுள்ளார். ஆனால் மூவரும் கேட்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கடும் வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது.
இந்த நிலையில், அதே தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், தட்சிணாமூர்த்தி ஆகிய இருவர் சண்டையை விலக்கியுள்ளனர். அப்போது ஆதம் தான் வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி இருவரையும் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தோஷ்குமார் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த தட்சிணாமூர்த்தியை அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சந்தோஷ்குமார், திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தியால் குத்தியதும் ஆதம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரது நண்பர்களான ராகுல்தீன் மற்றும் ஹாஜ் முகமது ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.