
புதுடெல்லி: “சோழர்களுடைய போர் திறனையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ அவன் தொடங்கிய போரை அவன்தானே முடித்து வைத்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் வந்து முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடித்து வைத்ததாக 25 முறை சொன்னார். ராஜராஜன் போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜ சோழன்” என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் பேசினார்.
மக்களவையில் நேற்று முதல் தொடரும் ’ஆபரேஷன் சிந்தூர்’ மீதான சிறப்பு விவாதத்தில் மதுரை எம்பியான சு.வெங்கடேசன் பேசியது: “தாக்குதல் தொடங்கி ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகுதான் அரசுக்கு தகவல் கிட்டியது பெரிய வெட்கக்கேடானது? இது, மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி சி.ஆர்.பி.எஃப்-ன் தோல்வி. ஜம்மு காஷ்மீர் காவல் துறையினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்க போவது? அதிகாரிகளா, அமைச்சரா? ஒரே தேசம், ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்லுவீர்களே… உங்கள் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறாரா?