
பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், வெகுண்டெழுந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாஜகவை முற்றிலும் எதிர்க்கத் துணிந்துவிட்டாரா ஓபிஎஸ்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறையும் வரை அம்மா பக்தராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன்பின்னர் முழுவதுமாக மோடி பக்தராக மாறிப் போனார். தர்மயுத்தத்தை தொடங்கியது, சசிகலாவின் அரசியலுக்கு முடிவுரை எழுதியது, தினகரனுக்கு ஸ்கெட்ச் போட்டது, எடப்பாடியோடு மீண்டும் கைகோத்தது, எடப்பாடியை விட்டு பிரிந்தது, தினகரன் – சசிகலாவோடு மீண்டும் சேர்ந்தது என கடந்த 10 ஆண்டுகளில் பல அவதாரங்களை பாஜகவின் ஆசியோடு எடுத்தவர்தான் ஓபிஎஸ்.