• July 29, 2025
  • NewsEditor
  • 0

‘எடப்பாடி சுற்றுப்பயணம்!’

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்…’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். இதுவரை 49 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்திருக்கிறார். வலுவாக இருக்கும் கொங்கு பெல்ட்டில் ஆரம்பித்து வடக்கில் விழுப்புரம் தொட்டு டெல்டா மாவட்டங்கள் வழியாக இப்போது தென் மாவட்டங்களுக்கு செல்லவிருக்கிறார்.

எடப்பாடி சுற்றுப்பயணம்

இன்று முதல் தென்மாவட்டங்களில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார். அடுத்த 10 நாட்களில் தென் மாவட்டங்களில் எடப்பாடி பிரசாரம் செய்யவிருக்கும் 30 தொகுதிகளுமே அதிமுகவுக்கு சவாலானவை. இந்தத் தொகுதிகளை வென்றெடுப்பதில் அதிமுகவுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கப்போகிறது.

சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி கொடுத்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அதை அவருமே உணர்ந்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.

எடப்பாடிக்கான சவால்கள் என்னென்ன?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘பிரசாரம் செய்யும் தொகுதிகள்!’

காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டபிடாரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ராதாபுரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை. இந்த 30 தொகுதிகளில்தான் எடப்பாடி அடுத்த 10 நாட்களில் பிரசாரம் செய்யவிருக்கிறார். இந்த 30 தொகுதிகளில் 7 தொகுதிகளில் மட்டுமே கடந்த முறை அதிமுக வென்றிருந்தது.

‘2021 – தினகரன் ஏற்படுத்திய தாக்கம்!’

2021-ல் அதிமுக-வுக்கு பெருத்த அடியை தென்மாவட்டங்கள் கொடுத்திருந்தன. காரணம், டிடிவி தினகரன். அதிமுக – பாஜக கூட்டணியில் இடம் கிடைக்காததால் தேமுதிகவையும் SDPI யையும் சேர்த்துக் கொண்டு தனிக் கூட்டணி கட்டியிருந்தார். டிடிவி தினகரனும் சசிகலாவும் முக்குலத்தோர் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருப்பதால் அந்த சமூக மத்தியில் அவர்களுக்கு பெருமளவு செல்வாக்கு கிடைத்தது. மேலும், தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டமன்றத்தில் எடப்பாடி அறிவித்த வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடும் மற்ற சமூக மக்களிடையே எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.

TTV தினகரன்
TTV தினகரன்

முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக இருக்கும் தென் மாவட்டங்களை குறிவைத்து இறங்கியிருந்த டிடிவி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டை எடப்பாடிக்கு எதிரான பிரசார ஆயுதமாக பயன்படுத்தினார். டிடிவியின் பிரசாரம் தென் மாவட்டங்களில் நிறைய தொகுதிகளில் தாக்கம் ஏற்படுத்தியது. அதே சமூகத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ்ஸை அரவணைத்து துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை கொடுத்திருந்த போதும் எடப்பாடியால் தென் மாவட்டங்களில் காலூன்ற முடியவில்லை.

தேர்தல் முடிவுகளின் தென் மாவட்டங்கள் அதிமுகவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தன. குறிப்பாக, எடப்பாடி பிரசாரம் செய்யவிருக்கும் இந்த 30 தொகுதிகளில் 7 தொகுதிகளை மட்டும்தான் அதிமுக கூட்டணி வென்றிருந்தது. எந்தத் தொகுதிகளையும் வெல்லவில்லையென்றாலும் டிடிவியின் அமமுக அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் பறித்திருந்தது.

TTV தினகரன்
TTV தினகரன்

இந்த 30 தொகுதிகளில் 15 தொகுதிகளில் அதாவது, காரைக்குடி, சிவகங்கை, மானா மதுரை, திருவாடானை, முதுகுளத்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், பாளை, நாங்குநேரி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் அமமமு கூட்டணி வேட்பாளர்கள் 10,000 க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். 11 தொகுதிகளில் நேரடியாக அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்திருந்தார் டிடிவி. நாடாளுமன்றத் தேர்தலிலுமே தென் மாவட்டங்களில் இழந்த செல்வாக்கை அதிமுகவால் மீட்டெடுக்க முடியவில்லை.

2021 தேர்தலுக்கும் 2026 தேர்தலுக்கும் இடையே தென்மாவட்டங்களை குறிவைத்து எடப்பாடி பெரிதாக எந்த காயையும் நகர்த்தவில்லை. 2021 தேர்தலில் ஓ.பி.எஸ் அதிமுகவோடு இருந்தார். இப்போது அவரும் தொண்டர் உரிமை மீட்புக் குழு என தனியாக நிற்கிறார். எடப்பாடியும் பன்னீரை சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். பாஜகவும் ஓபிஎஸ் யை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில்தான் செப்டம்பர் 4 இல் மதுரையில் ஓபிஎஸ் மாநாடு ஒன்றை நடத்தவிருக்கிறார். தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்.

OPS
OPS

ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பித்து தனியாக நின்றாலோ அல்லது விஜய்யோடு கூட்டணி சென்றாலோ கடந்த முறை டிடிவி ஏற்படுத்திய தாக்கத்தை இந்த முறை ஓபிஎஸ் ஏற்படுத்தக்கூடும் என்பதே விவரமறிந்த அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக இருக்கிறது.

இந்தப் புள்ளியில்தான் எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் திரட்டியிருந்த கூட்டத்துக்கு மத்தியில், ‘வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறதென நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் திமுக அரசு எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கப்படும்.’ என எடப்பாடி பேசியிருந்தார். எடப்பாடியின் இந்தப் பேச்சு தென்மாவட்டங்களில் எதிர் விளைவுகளையே உண்டாக்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்குவோம் என்ற எடப்பாடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சில சமூக அமைப்புகள் போஸ்டர்கள் ஒட்டியிருக்கின்றன. இந்நிலையில்தான் தென்மாவட்டங்களுக்கு கிளம்புவதற்கு முன்பாக திருச்சியில் பத்திரிகையாளர்களை எடப்பாடி சந்தித்திருந்தார். அப்போது, ‘விழுப்புரத்தில் 10.5% இடஒதுக்கீடு வழங்குவோம் என பேசியிருந்தீர்களே…’ என ஒரு பத்திரிகையாளர் கேட்க, ‘அது முடிந்து போன விஷயம். மத்திய அரசு ஏற்கனவே என்ன செய்ய வேண்டுமென கூறிவிட்டது. நீங்கள் எதையாவது கேட்காதீர்கள்.’ என பதில் சொல்ல முடியாமல் மழுப்பி பத்திரிகையாளர் மீது பாய்ந்தார்.

ஓபிஎஸ் யை கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதை வெளிப்படையாகப் பேசும் எடப்பாடி, டிடிவியைப் பற்றி எதுவுமே வெளிப்படையாகப் பேசுவதில்லை. திருச்சியில் அதே பத்திரிகையாளர் சந்திப்பில், ‘NDA கூட்டணியில் என்னென்ன கட்சிகள் இருக்கிறது?’ என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருக்கிறது. பாஜகவுடன் சில கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது.’ என எடப்பாடி பதிலளித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

டிடிவி அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை. ஆனால், பாஜகவோடு கூட்டணியில் இருக்கிறார். NDA வில் இருக்கிறார் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்.

தென் மாவட்டங்களில் இழந்த செல்வாக்கை எதைப் பேசி மீட்டெடுக்கலாம். யாரை முன்வைத்து மீட்டெடுக்கலாம் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய குழப்பம் இருக்கிறது. அந்த குழப்பதுடனேதான் தென்மாவட்டங்களுக்கான பிரசார பயணத்தையும் தொடங்கியிருக்கிறார்.

முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மாஜி அமைச்சர் அன்வர் ராஜா திமுக-வில் இணைந்ததால் மைனாரிட்டி வாக்குகள் சிக்கலாகும் என்று நினைக்கும் அதிமுக தலைமை, மாவட்டத்தில் மெஜாரிட்டியாக இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளும் தங்களுக்கு எதிராக இருப்பதால் யாராவது பிரபலமான நபரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர் முனியசாமிக்கு உத்தரவிடப்பட்டதாம். அதன்படி, ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் என்று சொல்லிக் கொள்கிற நாகேந்திர பூபதி, அதிமுகவில் இணைக்கப்பட்டுள்ளார். ஏற்கனெவே பாஜக ஆதரவுடன் செயல்பட்ட நாகேந்திர பூபதி தன்னை இளைய மன்னர் குறிப்பிட்டுக் கொள்வதே தவறானது, என்று மற்ற சேதுபதி மன்னர் வாரிசுகளுக்குள் பிரச்சனை உள்ளது தனிக்கதை.

இது எல்லாவற்றையும் கடந்து, அடுத்த 10 நாட்களில் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் எப்படியெல்லாம் காய்களை நகர்த்தப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *