
நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் ஆளும் அரசையும், பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் கடுமையான கேள்விகளை முன்வைத்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது என்றத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோழர் சு.வெங்கடேசன் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருபவர். அவர் இந்துத்துவா சக்திகளின் வகுப்புவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி உறுதியான முறையில் நாடாளுமன்றத்திற்குள்ளும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதை நாடறியும்.
இந்த நிலையில், 28.7.2025 அன்று பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளார். அவர் உரையாற்றிய இரவு யாரோ, சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு `நீ எப்படி பிரதமர் மோடியை விமர்சித்து பேசலாம்? நீ தமிழ்நாட்டுக்குள் உயிரோடு வர முடியாது. நீ தமிழ்நாட்டுக்கு வந்தால் உன்னை நானே கொலை செய்வேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்ததுடன் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளான்.

சமூக விரோதியின் இந்த கொலை மிரட்டலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக நேற்று இரவே (28.7.2025) தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கு இணையம் மூலம் சு.வெங்கடேசன் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்த ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டனக் குரலை எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.