• July 29, 2025
  • NewsEditor
  • 0

முழு வீச்சில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்திய புதுச்சேரி கல்வித்துறை

புதுச்சேரியில் கடந்த 2021-ல் பா.ஜ.க – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் அவசர அவசரமாக சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் குறித்த பயிற்சியை கொடுக்காமல் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஆனால் அதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசு, முழு வீச்சில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி முடித்தது. இந்த நிலையில்தான் புதுச்சேரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,054 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில், `பள்ளிக் கல்வித்துறையின் மூன்று முக்கிய முயற்சிகள் குறித்து தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

பள்ளி மாணவர்களுக்கு டைப் – 2 நீரிழிவு நோய்

நமது சுற்றுச்சூழலை வலுப்படுத்தவும், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும்  நல்வாழ்வை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின்படி 2030-ம் ஆண்டுக்குள் இடைநிற்றல் இல்லாத 100% சதவிகித மாணவர் சேர்க்கை திட்டமிடப்பட்டு, பள்ளிப்படிப்பை நிறுத்திய குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையங்களுக்கு கொண்டுவர வேண்டும் என்பது இலக்கு.

ஆனால் 2023-24-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உங்கள் புதுச்சேரி மாநிலத்தில், 10,054 ஆயிரம் குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியதாக பதிவாகியிருக்கிறது.

மாணவர்கள் | கோப்புப் படம்

அதனால் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு உங்கள் தலையீட்டில் தீவிரமான நடவடிக்கைகள் வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களிடையே டைப்-2 நீரிழிவு நோய் அதிகரித்து வருவதும் கவலை அளிக்கின்றன.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதன் காரணமாக, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மாணவர்களிடம் குறைந்துவிட்டது.

பள்ளிகளில் நீரிழிவுப் பலகை அவசியம்

அதனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மாணவர்கள் சாப்பிடுவதை தடுத்து, அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வது அவசியம் என்று நம்புகிறேன்.

சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பள்ளிகளிலும் 2025-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதிக்குள் நீரிழிவு பலகையை வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதில் பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு, ஆரோக்கியமற்ற உணவுகளில் உள்ள சர்க்கரையின் அளவு இருக்க வேண்டும்.

முதல்வர் ரங்கசாமி

அத்துடன் சத்தற்ற உணவு (Junk food), குளிர் பானங்கள் உள்ளிட்ட அதிக சர்க்கரை உள்ள பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த தகவல்களை குறிப்பிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை புதுச்சேரி அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *